தோனி இத்தனை ஆண்டுகள் வழிநடத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்த சீசனில் ருத்துராஜ் வழி நடத்தி வருகிறார். சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடிவரும் அதே வேளையில் கடைசியில் சில போட்டிகள் தோல்வியடைந்ததால் பிளே ஆப் முன்னேறுவதில் சில நெருக்கடிகளும் தற்போது உருவாகியுள்ளது.
முதல் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி கண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஏழு போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மீதம் இருப்பதால் அதில் நிச்சயம் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை எட்டி விடலாம் என்றும் கருதப்படுகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட பல அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டி போட்டு வரும் நிலையில் சென்னை அணி அடுத்த போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்று விட்டாலே பிளே ஆப் சுற்றுக்கு ஏறக்குறைய முன்னேறி விடலாம்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு உள்ளிட்டவற்றில் சில பலவீனங்கள் சிஎஸ்கே பக்கம் இருந்தாலும் அந்த அணியை மிகச் சிறப்பாக தோனியைப் போலவே ருத்துராஜ் தலைமை தாங்கி வருகிறார் என்றே தெரிகிறது. எப்படிப்பட்ட நெருக்கடியாக இருந்தாலும் அதனை மிகக் கூலாக எதிர் கொண்டு அணியில் உள்ள வீரர்கள் தேற்றி வருவதில் கில்லாடியாக இருந்து வருகிறார் ருத்துராஜ்.
ஆனால், அதே வேளையில் இன்னும் பயிற்சி வேண்டுமோ என சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜை ஒரு விஷயம் தொடர்ந்து ஏங்க வைத்து வருகிறது. மொத்தம் 13 போட்டிகளில் 11 முறை டாஸ் தோல்வி அடைந்துள்ளார் ருத்துராஜ். டாஸ் என்பது ஒரு அணி என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முக்கிய ஃபேக்டராக இருக்கும் நிலையில் அதனை தவறவிட்ட போதிலும் பல போட்டிகளில் வெற்றி பெற ருத்துராஜ் உதவி இருந்தார்.
இதனால் டாஸ் தோற்றும் ஒரு அணியை வெற்றி அடைய வைப்பது சாதாரணமான விஷயம் இல்லை என்றும் ருத்துராஜை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு பக்கம் ருத்துராஜ் டாஸ் தோற்றும் இப்படி செயல்பட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மும்பையின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் இந்த சீசனில் அதிக முறை டாஸ் வென்ற கேப்டனாக இருக்கிறார்.
டாஸ் வெல்வது மிக சாதகமான ஒரு விஷயமாக இருந்த போதிலும், அதனை வெற்றியாக மாற்ற முடியாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த மும்பை முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.