இரண்டு ஆண்டுகள் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, திடீரென மீண்டும் மும்பை அணியில் ஆடுவதாக விருப்பம் தெரிவித்து கேப்டனாகவும் மாறி இருந்தது, ரசிகர்கள் மத்தியில் கடும் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. குஜராத் ரசிகர்களும், ரோகித் ரசிகர்களும் மும்பை அணியின் நிர்வாகத்தின் மீதும் கடுப்பில் இருக்க, இந்த தொடரில் ஹர்திக் கேப்டனாக வரும்போது என்ன நடக்கும் என்ற குழப்பத்திலேயே பாதிப்பேர் பரபரப்பாக இருந்தனர்.
அப்படி ஒரு சூழலில் முதல் இரண்டு போட்டிகள் முறையே குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளின் சொந்த மைதானத்தில் வைத்து மும்பை ஆடி இருந்ததால் அங்கேயும் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கிடையே மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்ததால் இங்கே நிச்சயமாக ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவு இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் மற்ற இரண்டு இடங்களைவிட மும்பையில் தான் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தது. டாஸ் போடுவதற்காக அவர் வந்த சமயத்தில் மைதானத்தில் இருந்து ரசிகர்கள் பூ பூ என கத்தியதுடன் ரோகித், ரோகித் என்றும் ஆரவாரம் செய்து நெருக்கடியை கொடுத்தனர்.
இது ஒரு புறம் இருக்க தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு கிடைக்காமல் இருந்து வரும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியும் தற்போது அதிக விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் அவரது பவுலிங் ரொட்டேஷன் உள்ளிட்ட பல தேர்வுகள் விமர்சனத்தை எழுப்ப மூன்றாவது போட்டியில் மும்பை அணியின் பேட்டிங்கே நிலைகுலைந்து போனது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக 125 ரன்கள் மட்டுமே அவர்கள் எடுத்திருந்த நிலையில் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி இளம் வீரர் ரியான் பராக் அரை சதத்தின் உதவியுடன் எளிதாக இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்த தொடரில் பெங்களூரு அணிக்கு பிறகு சொந்த மைதானத்தில் தோற்ற ஒரே அணி மும்பை தான். அதிரடியான வீரர்கள் பலர் இருந்தபோதிலும் மூன்று போட்டிகளில் அவர்களால் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்தில் இருப்பது ரசிகர்கள் மத்தியிலும் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. முதலில் ஹர்திக் விவகாரத்தில் ஒரு தீர்வு கண்டு அவருக்கு ஆதரவாக அனைவரும் இருந்தால் தான் மும்பை அணியால் வெற்றி பெற முடியும் என்றும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதனிடையே, ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா பேசுகையில், “ஆம், இது ஒரு கடினமான இரவு தான். நாங்கள் விரும்பியது போல போட்டியை எங்களால் தொடங்க முடியவில்லை. நாங்கள் 150 முதல் 160 ரன்கள் வரை அடிக்கும் நிலையில் தான் இருந்தோம். ஆனால் எனது விக்கெட்டை ராஜஸ்தான் அணி எடுத்ததால் மீண்டும் போட்டியில் திரும்ப வந்தார்கள். நான் அணிக்காக நிறைய ரன் சேர்க்க வேண்டுமென நினைத்தேன்.
இது போன்றொரு சர்ஃபேஸை பேட்ஸ்மேனாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பவுலர்களிடம் ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன். நாம் சரியான விஷயங்களை செய்வதில் தான் உள்ளது. சில நேரம் அதற்கு பலன் கிடைக்கும். சில சமயங்களில் கிடைக்காமலும் போகலாம். ஒரு அணியாக எங்களால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என நம்புகிறேன்.
ஆனால், அதே நேரத்தில் ஒழுக்கத்தையும், தைரியத்தையும் அதிகமாக வெளிப்படுத்தி ஆட வேண்டுமென நினைக்கிறேன்” என ஹர்திக் பாண்டியா கூறினார்.