இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் ஐபிஎல் 2023 ஏலத்தில் 13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இவ்வளவு பெரிய தொகைக்கு அவர் வாங்கப்பட தனது முதல் 6 டெஸ்டில் 4 சதங்களை அடித்ததுதான் காரணம். டெஸ்ட் இன்னிங்ஸ்களையே ஒருநாள் போட்டி போல விளையாடி கவனத்தைப் பெற்றார். பொதுவாக மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்படும் வீரர்கள் சொதப்புவது ஐபிஎல் தொடரின் வாடிக்கை.
ஐபிஎல் போட்டித்தொடரில் முதலில் சில போட்டிகளில் தடுமாறிய ப்ரூக் ஏப்ரல் 14 அன்று கொல்கத்தாவில் KKR க்கு எதிராக மேட்ச் வின்னிங் சதத்தை அடித்தார். இருப்பினும் அந்த ஒரு போட்டியைத் தவிர அவரின் மற்ற இன்னிங்ஸ்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ப்ரூக், 9 போட்டிகளில் 163 ரன்கள் மட்டுமே எடுத்ததால், அவரது ஃபார்ம் இப்போது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. சதமடித்த இன்னிங்ஸுக்குப் பிறகு ப்ரூக் 9, 18, 7, 0, 0 என்ற என்ற மோசமான ஸ்கோர்களையே பெற்றுள்ளார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் புள்ளிப் பட்டியலில் கீழே கொல்கத்தா நைட் ரைடர்ஸும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 166 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த போட்டியிலும் ப்ரூக் டக் அவுட் ஆனார். இதனால் அந்த அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இதையடுத்து ப்ரூக் மேல் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துள்ளனர். அவரின் ஃபார்ம் சம்மந்தமாக மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகின்றன. ப்ரூக்கின் பார்ம் பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, “ப்ரூக்குக்கு ஒரு சிறிய ஓய்வு தேவை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிடில் ஆர்டரில் க்ளென் பிலிப்ஸ் போன்ற ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.