உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளது. இதற்கு தயாராவதற்காக ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் செய்தது.
இதில் தொடக்க வீரர்கள் ஹென்ரிக்ஸ் 28 ரன்களும், டி காக் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் மார்க்ரம் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். இதன்பின் வாண்டர் டசன் – கிளாசன் கூட்டணி சேர்ந்தது. நிதானமாக ஆடிய வாண்டர் டசன் 65 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிர்கு 194 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் கிளாசன் – மில்லர் ஜோடி இணைந்தது. அப்போது கிளாசன் 24 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். அதன்பின் கிளாசனின் அதிரடியை ஆஸ்திரேலிய அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. 38வது ஓவருக்கு பின் ஆஸ்திரேலிய அணியின் எந்த பவுலர் பந்துவீசினாலும் சிக்சரும், பவுண்டரியுமாய் ஆட்டத்தில் அனல் பறந்தது.
38 பந்துகளில் அரைசதம் அடிக்க கிளாசன், அடுத்த 19 பந்துகளில் சதத்தை எட்டினார். 57 பந்துகளில் கிளாசன் சதம் விளாசி பின் அவரின் ஆட்டம் அடுத்த கட்டத்திற்கு மாறியது. பின்னர் 77 பந்துகளில் 150 ரன்களை எட்டிய கிளாசன், மொத்தமாக 83 பந்துகளில் 13 பவுண்டரிகள், 13 சிக்சர்கள் உட்பட 174 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
அதுமட்டுமல்லாமல் எதிர்முனையில் நின்றிருந்த டேவிட் மில்லரும் தன் பங்கிற்கு ஆஸ்திரேலிய பவுலிங்கை பிரித்து மேய்ந்தார். இதன் காரணமாக இந்த கூட்டணி இணைந்து 92 பந்துகளில் 222 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக அமைத்துள்ளது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய மில்லர் 45 பந்துகளில் 5 சிக்ஸ், 6 பவுண்டரிகள் உட்பட 82 ரன்கள் குவித்தார்.
இதன்பின் இமாலய இலக்கை விராட்டிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 77 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் 400 ரன்களுக்கு மேல் அடித்தடன் மூலம், அதிக முறை (7 முறை) 400 ரன்களுக்கு மேல் அடித்த அணி என்ற உலகச் சாதனையை படைத்துள்ளது சவுத் ஆப்ரிக்கா அணி.