நீண்ட காலத்திற்கு பின் இந்திய அணி இடதுகை – வலதுகை ஓபனிங் காம்பினேஷனுக்கு திரும்பியுள்ளது. ஷிகர் தவானுக்கு பின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிம் வருகையால் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால் இளம் நம்பிக்கை நட்சத்திரமான சுப்மன் கில் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சரியாக இருப்பார் என்று ரசிகர்கள் கணக்கிட்டு வருகின்றனர்.
ஏனென்றால் 2023 ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 போட்டிகளில் விளையாடி 625 ரன்களை விளாசி தள்ளினார். பிளாட் பிட்ச்கள் மட்டுமல்லாமல் ஸ்லோ மற்றும் ஸ்பின் பிட்ச்களிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இந்திய அணியிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பிடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட, யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இடம் உறுதியானது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக இஷான் கிஷன் முன்னிறுத்தப்படுகிறார். சுமாரான ஐபிஎல் சீசன், கடைசியாக ஆடிய 15 போட்டிகளில் ஒரு முறை கூட 40 ரன்களை தாண்டவில்லை.
கடைசியா ஆடிய 15 மொத்தமாக 206 ரன்கள் மட்டுமே விளாசி இருப்பதால், இஷான் கிஷனுக்கு பதில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வர தொடங்கியுள்ளன. அதேபோல் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என்றும் ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது.
ஏனென்றால் இஷான் கிஷனுக்கு ஸ்விங், ஸ்பின் மற்றும் ஸ்லோ பிட்ச்களில் பேட்டிங் செய்வதென்றால் என்னவென்றே தெரியாது. இதுவரை தன்னால் அதுபோன்ற பிட்ச்களில் விளையாட முடியும் என்று நிரூபித்து காட்டியதும் இல்லை. இதனால் ரோகித் சர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் கோட்டாவால் இஷான் கிஷன் இந்திய அணியில் நீடித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற காரணமும் இஷான் கிஷனின் வாய்ப்புக்கு மறைமுக காரணமாக அமைந்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ளதால், இப்போதிருந்தே யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அணிக்குள் கொண்டு தயார் செய்ய வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.