கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை செவ்வாய் கிழமை வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அட்டவணையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி போன்றவை உன்னிப்பாக நோக்கப்பட்டாலும், அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதிருந்தே துவங்கி விட்டது என்றே கூறலாம்.
அக்டோபர் 5 ஆம் தேதி முதல் துவங்க உள்ளார் இந்த தொடரில், 2019 உலகக்கோப்பை பைனலில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே தான் முதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த துவக்க போட்டியானது நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடைபெறவுள்ளது. அதே போல இறுதி போட்டியும் அங்கு தான் நடைபெற உள்ளது.
செமி பைனலை பொறுத்தவரை மும்பை வான்கடே மைதானத்திலும், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்திலும் நடைபெற உள்ளது. இந்த இரு மைதானங்களும் இந்திய ரசிகர்களை பொறுத்தவரை ஒரு ஸ்பெஷல் மைதானங்கள் என்றே கூறலாம். அதே போல இந்த போட்டிகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருக்கும்.
இந்த நிலையில் ரசிகர்கள் எந்த விதமான தங்கு தடையும் இன்றி டிக்கெட்களை பெரும் வகையில் இந்த முறை பல்வேறு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்டுகிறது. அந்த வகையில் ஐசிசி உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ ஆப் மற்றும் இணையதளம், டிக்கெட் வாங்குவதற்கான முதன்மை சேனல்களாக செயல்படும்.
அதே சமயம் BookMyShow, Paytm மற்றும் Paytm Insider போன்றவற்றிலும் டிக்கெட்கள் கிடைக்கும். டிக்கெட்டின் விலையானது மைதானத்தை பொறுத்து மாறுபடும். தோராயமாக 500 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் வரை டிக்கெட்கள் விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் சில முக்கிய போட்டிகளுக்கு இதை விட கூடுதலாகவும் விற்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
நேரடி ஒளிப்பரப்பை பொறுத்தவரை இந்த முறை ஹாட்ஸ்டாரில் இலவசமாக போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளது. டிக்கெட் விற்பனையை பொறுத்தவரை ஐசிசி தரப்பில் இருந்து இதுவரை எப்போது டிக்கெட்கள் விற்பனை துவங்கும் என்று எந்த ஒரு தகவலும் வரவில்லை. எனினும் அதிகப்படியான டிக்கெட்கள் இணையவழியாகவே விற்கப்படும் என்றும் குறைந்த அளவிலான டிக்கெட் மட்டும் தான் நேரடியாக விற்கப்படும் என்றும் கூறப்படுகிறது.