இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கிஉ 399 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுப்மன் கில் 104 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். முதல் போட்டியில் 74 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை மிஸ் செய்த சுப்மன் கில், இரண்டாவது போட்டியில் அசத்தினார்.
இந்த சதத்தின் மூலமாக அதிவேகமாக 6வது சதத்தை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார். அதுமட்டுமால்லாமல் ஒரே ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் 1898 ரன்கள் சேர்த்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு சுப்மன் கில்லுக்கு கிடைத்துள்ளது. இதனால் சுப்மன் கில்லை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் மட்டும் சுப்மன் கில்லை கடுமையாக விமர்சித்துள்ளார். சுப்மன் கில் ஆட்டம் பற்றி சேவாக் பேசும் போது, முதல் ஒருநாள் போட்டியில் மிஸ் செய்த சதத்தை இன்றையப் போட்டியில் அடித்திருக்கிறார். ஆனால் வெறும் 104 ரன்களில் ஆட்டமிழந்தது நிச்சயம் ஏமாற்றம் தான். ஏனென்றால் சுப்மன் கில்லால் அந்த இன்னிங்ஸில் 160 முதல் 180 ரன்களை வரை எளிதாக சேர்த்திருக்க முடியும்.
அவரின் வயது 24 தான் ஆகிறது. 200 ரன்கள் அடித்தாலும், உடனடியாக ஃபீல்டிங் செய்யும் வகையில் அவரின் உடல்தகுதி இருக்கும். ஆனால் 30 வயதாகும் போது அப்படி செய்ய முடியாது. உடல் ஓய்வுக்காக தேடும். அதனால் இளம் வயதிலேயே பெரிய ஸ்கோரை விளாச வேண்டும். சுப்மன் கில் மிகச்சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். அதனால் விக்கெட்டை எளிதாக விட்டுக் கொடுக்கக் கூடாது.
சுப்மன் கில் ஆட்டமிழந்த போது, 18 ஓவர்கள் மீதமிருந்தது. நிச்சயம் அதில் 9 முதல் 10 ஓவர்கள் ஆடியிருந்தாலே, இரட்டை சதத்தை விளாசி இருக்க முடியும். ரோகித் சர்மா 3 முறை இரட்டை சதத்தை விளாசி இருக்கிறார். இரண்டாவது முறையாக சதம் விளாசும் வாய்ப்பு கில்லுக்கு கிடைத்துள்ளது. அதனை வீணடித்துவிட்டார் என்று விமர்சித்துள்ளார்.
இதே இந்தூர் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் இரட்டை சதம் விளாசினார். அதேபோல் ரோகித் சர்மா 36 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.