ஆசியக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று ஆட்டம் பாலக்கேலேவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இஷான் கிசன் 82 ரன்களும், ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் விளாசினர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை ஷாகின் அப்ரிடி வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் மட்டுமே இருந்த ஸ்விங்கை பயன்படுத்தி, புதிய பந்தில் இந்திய பேட்ஸ்மேன்களை பாடுபடுத்திவிட்டார் ஷாகின் அப்ரிடி.
இதுகுறித்து ஷாகின் அப்ரிடி பேசும் போது, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் முதல் 10 ஓவர்களுக்குள் வீழ்த்துவதே எங்களின் திட்டமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் விக்கெட்டுகள் மிகவும் முக்கியமானது. அதனை மட்டும் அறிந்து வைத்திருந்தோம். என்னை பொறுத்தவரை அனைத்து விக்கெட்டுகளும், அனைவத்து பேட்ஸ்மேன்களும் ஒன்று தான்.
இரு விக்கெட்டுகளில் பிடித்த விக்கெட் எது என்று கேட்டால், நிச்சயம் ரோகித் சர்மாவின் விக்கெட்டை தான் அதிகமாக ரசித்தேன். எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்பட்டன. நசீம் ஷா 150கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசிக் கொண்டே இருந்தார். நான் எதிர்பார்த்ததை விடவும் அதிக வேகத்தில் வீசினார்.
இந்த ஆடுகளத்தில் புதிய பந்தில் ஸ்விங் சரியாக செய்ய முடிகிறது. 15 ஓவர்கள் வரை ஸ்விங் செய்ய முடியும் என்ற நிலையில், அதன்பின் எந்த உதவியும் இல்லை. பந்து ஓரளவிற்கு பழையதானதும் எளிதாக ரன்கள் சேர்க்க முடிகிறது என்று தெரிவித்தார். இதனால் பாகிஸ்தான் அணியால் எளிதில் வெற்றிபெற முடியும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால் மழை வந்து இந்திய அணி காப்பாற்றிவிட்டது. அதுமட்டுமல்லாமல் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதால், பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் திறமையை அறிந்த இந்திய அணி சூப்பர் 4 சுற்றிலாவது பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.