இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரின் மிகப்பெரிய போட்டியாக பலரது மத்தியிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டியானது அக்டோபர் 12-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றி பதிவு செய்தது.
இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பிறகு பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் சமூக வலைதளத்தின் மூலம் முன்வைக்கப்பட்டு வருவதோடு மட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் முக்கிய நிர்வாகிகளும் இந்த போட்டி குறித்து குறை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டி ஐசிசி நடத்தியது போன்ற தெரியவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ நடத்தியது போன்று இருதரப்பு போட்டியாக நடத்தியது போல் முடிந்தது என்றும் பாகிஸ்தான் அணியின் நிர்வாக இயக்குனர் மிக்கி ஆர்தர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் ” இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் மைதானத்தில் முற்றிலுமாக ஒரு தலைப்பட்சமாக இந்திய அணிக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. பாகிஸ்தான் அணி சார்பாக எங்களை ஆதரிக்கும் ரசிகர்கள் மைதானத்தில் காணப்படவில்லை. அதோடு ஒரு சில அனுமதி பெற்ற பத்திரிகையாளர்கள் மட்டுமே பாகிஸ்தான் அணி சார்பாக மைதானத்தில் நடந்த போட்டியை முழுவதுமாக பார்த்தனர். அவர்களை தவிர்த்து பெரிய அளவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மைதானத்தில் யாரும் இல்லை என்று அவர் கூறினார்.
மேலும் தோல்விக்கு இதை ஒரு சாக்கு போக்காக சொல்ல மாட்டேன் என்றாலும் இந்த போட்டி ஐசிசி நடத்தியது போல் இல்லை பிசிசிஐ நடத்தியது போல் தான் தெரிகிறது என்ற கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். அவர் வைத்த இந்த குற்றச்சாட்டிற்கு ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ராவும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரமும் பதிலடி கொடுத்து தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்த வேளையில் தற்போது ஐசிசி சேர்மன் கிரேக் பார்க்லே தனக்கு பதிலினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
ஐசிசி நடத்தும் பெரிய தொடர்களில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது வழக்கமான ஒரு தொடர்கதை ஆகிவிட்டது. அதையெல்லாம் தற்போது நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நாங்கள் இந்த தொடரினை நடத்துவதிலேயே தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது தான் உலகக்கோப்பை தொடர் ஆரம்பித்துள்ளது இன்னும் நீண்ட தூரம் இந்த தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரை திருப்தியாக முடித்துவிட்டு அதன்பிறகு அவர் கூறிய குற்றச்சாட்டு குறித்து யோசிக்கலாம் என்று நேரடியாக தனது பதிலை அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.