நேற்றிரவு நடக்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி மழை காரணமாக ரிஸர்வ் நாளான இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த போட்டி 7.30மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் வந்து கொட்டும் மழையில் நனைந்து காத்திருந்தனர். கிட்டத்தட்ட போட்டி நாளை நடக்கும் என்ற அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் அங்கிருந்து கிளம்பவில்லை. குஜராத்தில் நடந்த போட்டியைக் காண சென்னையில் இருந்தும் ரசிகர்கள் சென்று காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது டிவிட்டரில் இந்த போட்டி சம்மந்தமான வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் நடுத்தர வயது பெண் ஒருவர் குஜராத் காவலர் சீருடையில் இருக்கும் ஒருவரை கன்னத்தில் அறைவதும், அவரை பிடித்துக் கீழே தள்ளுவதும் இடம்பெற்றுள்ளது. அந்த பெண்ணின் செயலுக்கான பின்னணிக் காரணம் எதுவும் தெரியவில்லை.
அந்த வீடியோ பதிவை ட்விட்டரில் பதிவிட்டுருந்த நபர் அந்த சம்பவம் குறித்த மேலும் சில விடயங்களையும் பதிவிட்டிருந்தார். அதாவது அந்த வீடியோவில் பாதி நிகழ்வு கூட இடம்பெறவில்லை என்றும், அந்த பெண் நான்கு முதல் ஐந்து முறை அந்த காவலரை அறைந்த பிறகு என்ன நிகழ்ந்ததோ அது மட்டும் தான் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதே சமயம் அந்த நிகழ்விற்கு பிறகு அந்த பெண் எதுவுமே நடக்காததை போல அமைதியாக உட்கார்ந்து இருந்தார் என்றும், சிறிது நேரத்திற்கு பிறகு மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இப்போது வைரல் ஆகியுள்ள நிலையில் பலரும் அந்த வீடியோவைப் பகிர்ந்து சம்மந்தப்பட்ட பெண் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். மேலும் சிலர் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை இப்படி ஒரு பெண் தாக்குகிறார் என்றால் அவர் அதிகாரமையத்தைச் சேர்ந்தவரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
அதே போல இன்னும் சிலரோ என்ன நடந்திருந்தாலும் அந்த பெண்ணின் செயல் ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. ஆனால் ஏன் அந்த காவலர் அந்த பெண்ணை எதிர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.