ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாக கோப்பையை வெல்லும் வாய்ப்புடைய முதன்மை அணியாக இந்திய அணியையே பலரும் தேர்வு செய்தனர். ஏனெனில் அந்த அளவிற்கு இந்திய அணியின் வீரர்கள் சிறப்பான பார்மில் இருந்தனர்.
அதற்கு ஏற்றவாறே இந்திய அணியும் தங்களது சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் 8 லீக் ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள இந்திய அணியானது புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நங்கூரமிட்டு அமர்ந்திருக்கிறது.
அதோடு முதல் அணியாக தங்களது அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்த இந்திய அணியானது இந்த தொடரில் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை சந்திக்க இருக்கிறது. அதன்படி நவம்பர் 12-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் அந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதிக்கு செல்லும் முனைப்போடு காத்திருக்கிறது.
இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணி 8 வெற்றிகளை பெற்று அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்து விட்டதால் கடைசி லீக் ஆட்டத்தில் முக்கிய சீனியர் வீரர்கள் நான்கு பேருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று அதிகாரபூர்வமற்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக இஷான் கிஷன், அஸ்வின், ஷர்துல் தாகூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளதாகவும் இந்த அணிக்கு கே.எல் ராகுல் தலைமை தாங்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு உறுதி செய்யப்பட்ட தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும் குறிப்பிட்ட இந்த சில மாற்றங்கள் நிகழும் பட்சத்தில் அரையிறுதி போட்டிக்கு சீனியர் வீரர்கள் புத்துணர்ச்சியுடன் வரலாம் என்பதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்று கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் இந்த தொடரில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.