அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த 50 ஓவர் உலககோப்பை தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்திருந்த வேளையில் இன்று அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடியது.
அதன்படி இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை குவித்தது.
பின்னர் 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை சிதறடித்து ஆரம்பத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இன்னிங்சை அதிரடியாக துவங்கினர். இவ்விருவரும் முதல் விக்கெட்டிற்கு 156 ரன்கள் சேர்ந்திருந்த வேளையில் இஷான் கிஷன் 47 ரன்களில் வெளியேறினார்.
அதன் பின்னர் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மாவும் சதமடித்து ஆட்டமிழந்த பின்னர் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடி காட்டினார். இதன் காரணமாக இறுதியில் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 273 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி மட்டும் 28 பவுண்டரிகளையும், 8 சிக்ஸர்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை இந்த போட்டியில் படைத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த உலககோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் ரோகித் சர்மா 131 ரன்களையும், இஷான் கிஷன் 47 ரன்களையும், விராட் கோலி 55 ரன்களையும், ஸ்ரேயாஸ் இயர் 25 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்படும் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ள வேளையில் அடுத்ததாக அக்டோபர் 14-ஆம் தேதி வரும் சனிக்கிழமை அன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.