இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று (செப்.24) இரண்டாம் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதில் டாஸ் வென்ற ஆஸி அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானிக்க, இந்திய அணி தனது அதிரடியான பேட்டிங் மூலம் 399 ரன்கள் விளாசியது. இதில் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் என இருவரும் சதம் அடித்தனர். கேஎல் ராகுல் மற்றும் சூரியகுமார் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
399 என்ற மெகா இலக்கை துரத்தும் நோக்கில் களம் இறங்கிய ஆஸி அணிக்கு ஏமாற்றமே மிச்சமானது. ஆரம்பத்திலேயே தனது விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா அணி, ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 217 ரன்கள் மட்டுமே அடித்தது.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், “நாங்கள் காலையில் மைதானத்தை பார்த்தபோது, பந்து இந்தளவு சுழலும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த போட்டியில் 400 ரன்கள் அடித்தது எங்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. இது உண்மையில் எங்களது நோக்கம் அல்ல.
நாங்கள் எங்களது வேலை என்னவோ அதனை தெளிவாக செய்தோம். அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் தங்களது வேலையில் தெளிவாக இருக்க வேண்டும். அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி தங்களுக்கான வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும்.
நாங்கள் சில கேட்சுகளை விட்டோம். இரவு நேர விளக்குகளின் கீழ் பீல்டிங் செய்வது பெரிய சவாலானது. எங்களது அணி வீரர்களை ஃபிட்டாக வைத்திருக்க பயிற்சியாளர்கள் அவர்களால் முடிந்ததை செய்கிறார்கள். ஆனாலும் சில நேரங்களில் கேட்ச் விடுவது போன்ற தவறுகள் நடக்கிறது.
எங்களிடம் எப்போதும் அர்ப்பணிப்பு இருக்கும், தவருகளில் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம். உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அணி வீரர்கள் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறிள்ளார்.