ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குத் தயாராகும் வகையில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
தொடர்ந்து இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (செப்.24) இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடங்கினர். முதலில் நிதான ஆட்டத்தை தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார்.
பின்னர் ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தனர். தனது அபார ஆட்டத்தால் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில்லும் சதம் அடித்தார். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் கிடைத்த 200 ரன்கள் சேர்த்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில்லும் 104 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தால் அரை சதம் அடித்தார். இதில் அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் 31 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுலுடன் சூர்யகுமார் யாதவ் கை கொடுத்தார். தொடர்ந்து கே.எல ராகுல் 52 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் நிதானமாக விளையாடி வந்த சூரியகுமார் யாதவ் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் வீசிய 44 வது ஓவரில் முதல் நான்கு பந்துகளையும் நான்கு திசைகளிலும் சிக்ஸர்கள் அடித்தார்.
முடிவில் சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் அடித்து 72 ரன்களை குவித்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை குவித்து ஆஸ்திரேலியா அணிக்கு அபார இலக்கை வைத்தது. தொடர்ந்து 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி விளையாடிய நிலையில் மழையின் காரணமாக சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் 33 ஓவர்களில் 317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடத்தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த அணியின் தொடக்க வீரர்கள் ஷார்ட் மற்றும் ஸ்மித் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 56 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லாபஸ்சேன் அணியின் 89 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியா அணி ரன்களை குவிக்க முடியாமல் தத்தளித்து வந்தது. பின்னர் களமிறங்கிய வார்னர் சொற்ப ரன்களில் அஸ்வின் பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 102 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர்.
அலெக்ஸ் கேரி 14, கேமரான் கிரீன் 19, ஆடம் ஜம்பா 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த நிலையில் சீன் அபோட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த ஆரமித்தனர். சீன் அபோட் 36 பந்துகளில் 54 ரன்களை அடித்தார். இது அவருடைய முதல் அரை சதம் ஆகும். ஜோஷ் ஹேசில்வுட் 16 பந்துகளில் 23 ரன்களை விளாசினார். கடைசியில் 28.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 217 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்திய அணி இரண்டாவது ஒருநாள் தொடரில் 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வெற்றிக்கனியை பறித்தது. ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பால் கிடைத்த 209 ரன்கள் ஆட்டத்தின் வெற்றிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது.
கடந்த 4 வருடங்களாக இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியை எதித்து விளையாடிய எந்த தொடரையும் வெல்லவில்லை. இந்த நிலையில் அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.