இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான குரூப் 4 சுற்றின் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணியின் துவக்க வீரர்கள் பெருமளவில் சொதப்பினர்.
அந்த அணியின் துவக்க வீரரான தன்சித் ஹசன் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆக, மற்றொரு துவக்க வீரரான லிட்டன் தாஸ் பூஜ்ஜியம் ரன்களுக்கு வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த அனாமுல் ஹக் 4 ரன்கள் மட்டுமே அடிக்க, கேப்டன் ஷகிப் அலிஹாசன் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். அடுத்தடுத்து வந்த வீரர்களான டவ்ஹித் ஹ்ரிடோய், நசும் அகமது போன்றவர்கள் அணியின் ஸ்கோரை உயர்த்த சிறப்பாக பாடுபட்டனர்.
கேப்டன் ஷகிப் அல் ஹசன் 85 பந்துகளில் 80 ரன்கள் எடுக்க, 81 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் டவ்ஹித் ஹ்ரிடோய் . அதே போல 45 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார் நசும் அகமது. இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு பங்களாதேஷ் அணி 265 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பௌலிங்கை பொறுத்த வரை ஷர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளும், முகமது சமி இரண்டு விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் ஆட வந்த இந்திய அணியின் துவக்க வீரர் மற்றும் கேப்டனான ரோகித் சர்மா பூஜ்ஜியம் ரன்களில் வெளியேற, மற்றொரு துவக்க வீரரானுக்கு கில் மட்டும் நிதானமாக ஆடி வந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களான திலக் வர்மா, கேஎல் ராகுல் போன்றோர் விக்கெட்டுகளை தொடர்ந்து விட்டுக் கொண்டே வர இறுதியாக வந்த அக்சர் பட்டேல் மட்டும் ஓரளவிற்கு ஆடினார். அவர் 34 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார்.
கில் 133 பந்துகளில் 121 ரன்கள் விலாசினார். ஆனாலும் மற்ற எந்த வீரரும் அடிக்காததால் இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பங்களாதேஷ் அணி இந்த போட்டியில் வென்றது. ஆட்டம் முடிந்த பிறகு தோல்வி குறித்து பேசி உள்ள ரோஹித் சர்மா கூறியதாவது,
நாங்கள் அணி வீரர்களுக்கு நல்ல ஒரு நேரம் கொடுக்க நினைத்தோம். அதேசமயம் இந்த போட்டியை நாங்கள் லேசாக எடுத்துக் கொண்டு விளையாட வில்லை. உலகக் கோப்பையில் இந்திய அணியில் விளையாட உள்ள வீரர்களுக்கான வாய்ப்புகளையும் இதில் வழங்கினோம். அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடினார். ஆனாலும் ஆட்டத்தை முடிக்கவில்லை. அவர் இந்த போட்டியில் பேட்டிங் பவுலிங் என இரண்டையும் செய்துள்ளார். பங்களாதேஷ் பவுலர்களுக்கு நாம் கிரெடிட் கொடுத்தே ஆக வேண்டும்.
கில் அடித்த சதம் அருமையானது. அவர் தன்னுடைய சிறப்பான பார்மில் இருக்கிறார். எப்போது எப்படி விளையாட வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதும் அவருக்கு தெளிவாக தெரியும். புதிய பந்துகளை அவர் சிறப்பாக எதிர்கொள்கிறார் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.