இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கண்டியில் நடைபெற்றது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. கடந்த ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான போட்டியாக அமைந்தது.
அதனால் மீண்டும் அதேபோன்றதொரு போட்டிக்காக சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் போட்டிக்கு முன்பாக மழை பற்றிய அச்சம் ரசிகர்களிடையே இருந்தது. ஏனென்றால் கடந்த இரு நாட்களாக கண்டியில் கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. இருப்பினும் இன்று வானிலை ஓரளவு சீராக இருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கயுடன் போட்டியை காண தொடங்கினர்.
இதன்பின் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் தொடக்க வீரராக களமிறங்கிய அவர் 11 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஸ்ரேயாஸ் 14 ரன்களிலும், சுப்மன் 32 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணியின் நிலை பரிதாபமாக மாறியது.
ஆனால் விக்கெட் கீப்பர் இஷான் கிசன் – ஹர்திக் பாண்டியா கூட்டணி இந்திய அணிக்காக போராட்டத்தை வெளிப்படுத்தியது. ஹாரிஸ் ராஃப், ஷாகின் அப்ரிடி உள்ளிட்டோரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இருவரும் ஸ்கோரைன் உயர்த்தினர். இஷான் கிசன் 82 ரன்களும், ஹர்திக் 87 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
இந்திய பேட்ஸ்மேன்கள் ஓய்வறை நோக்கி நடந்த போது மழை பெய்ய தொடங்கியது. அப்போது தொடங்கிய மழை, 9.49 வரை நிற்கவே இல்லை. இதனால் காத்திருந்து பார்த்த நடுவர்கள் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதுகூட நடக்காமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
இந்த போட்டியில் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சேர்ந்து அரிதான ஒரு சாதனையை படைத்துள்ளனர். அதாவது இந்தியாவிற்காக அதிகபட்ச 5வது விக்கெட் பார்ட்னெர்ஷிப் என்பது இதற்க்கு முன்பு ராகுல் டிராவிட் மற்றும் கைப் அடித்த 135 ரன்கள் தான் அதிக பட்சமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி தகர்த்து 138 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.