இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கியது. இந்த தொடரின் இறுதிப்போட்டியானது நாளை செப்டம்பர் 17-ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் கோப்பையை கைப்பற்ற பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை வென்றிருந்த வேளையில் தற்போது இந்த ஆண்டு 50 ஓவர் ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாட இருக்கிறது. என்னதான் சிறிய அணியாக இலங்கை அணி பார்க்கப்பட்டாலும் ஆசிய கோப்பை தொடரில் தற்போது அடுத்தடுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறி தங்களை ஒரு பலமான அணி என்று நிரூபித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தது போல் இம்முறை இந்திய அணியையும் வீழ்த்த இலங்கை அணி தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்பாக தற்போது இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனகா அதிரடி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :
இந்திய அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் விளையாட நாங்கள் தீவிரமாக தயாராக இருக்கிறோம். சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதோடு இந்த தொடர் முழுவதுமே மைதானத்தின் தன்மைக்கேற்ப நாங்கள் வீரர்களை தேர்வு செய்வதால் எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது.
இந்திய அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் நாங்கள் முதலில் பந்து வீசினால் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களை விரைவில் வீழ்த்தும் திட்டம் வைத்திருக்கிறோம். அப்பொழுதுதான் ஆட்டம் எங்களது பக்கம் திரும்பும். இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டி வரை வருவதற்கு நாங்கள் கடினமாகவே உழைத்திருக்கிறோம். எங்கள் அணியின் வீரர்கள் அணிக்கு தேவையான பங்களிப்பை விரும்பி செய்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இந்த தொடரில் நாங்கள் பின்தங்கி இருந்தாலும் தற்போது இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளோம். எங்களது அணி இதேபோன்று பெரிய போட்டிகளில் வெற்றி பெற ரசிகர்களும் விரும்புகிறார்கள். அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளில் இது போன்ற இறுதிப்போட்டியில் விளையாடுவதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என தசுன் ஷனகா குறிப்பிடத்தக்கது.