இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் 46 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 19 பந்துகளில் 35 ரன்களும் சேர்த்தனர்.
இதன்பின் 175 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ராய்ப்பூர் மைதானத்தில் ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாடுவது கடுமையான ஒன்றாகும். ஆஸ்திரேலியா அணி ஸ்பின்னர்களே சிறப்பாக செயல்பட்ட நிலையில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் பவர் பிளே ஓவர்களிலேயே அட்டாக்கில் வந்தனர்.
இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்திய அணியின் அக்சர் படேல் வெறும் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் வென்றதன் மூலமாக மற்றொரு முக்கியமான சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டி20 போட்டிகளை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இதுவரை 213 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 136 போட்டிகளில் வென்று அதிக வெற்றிகளை பெற்ற அணிக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணிக்கு பின் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணி 226 போட்டிகளில் விளையாடி 135 போட்டிகளில் வென்றுள்ளது. அதேபோல் 200 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 102 போட்டிகளில் வென்று 3வது இடத்தில் உள்ளது.
டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் வென்று பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதல்முறையாக இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற சூர்யகுமார் யாதவ், டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.