இந்திய கிரிக்கெட் அணி பிங்க் பந்து கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் ஆடியதில்லை என்ற ஒரு சூழலில் தான் அடிலெய்டு மைதானத்தில் அதே பந்தில் பகலிரவு ஆட்டத்தை இந்திய அணி ஆடவுள்ளது. அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் பிங்க் பந்தில் ஆடிய போட்டியில் தான் 36 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தனர்.
ஆனால் அவர்கள் தற்போதுள்ள பார்மிற்கு இந்த முறை அதே மைதானத்தில் நிச்சயம் ஆஸ்திரேலியாவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். பிங்க் பந்தில் அதிக அனுபவங்கள் இல்லை என்றாலும் ஒரு சில விஷயங்கள் இந்திய அணிக்கு சாதகமாக இருப்பது அடிலைடு மைதானத்தில் நடைபெறும் பகலிரவு போட்டியை இந்தியா வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்டில் கூட வெல்ல முடியாமல் சொந்த மண்ணில் தொடரை இழந்திருந்தது இந்திய அணி. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடி கம்பேக் கொடுத்திருந்தது. முதல் இன்னிங்சில் பேட்டிங்கில சொதப்பினாலும் பந்து வீச்சில் பும்ரா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக செயல்பட இந்திய அணியின் வெற்றியும் எளிதாக அமைந்திருந்தது.
இதனால் அதே வேகத்தில் இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் ஆடவுள்ளது அவர்களுக்கு சாதகமான விஷயம் தான். இதற்கடுத்த முக்கிய காரணமாக இருப்பது பிங்க் பந்தில் இந்திய அணி தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டிருந்தது தான். கடந்த 2020 ஆம் ஆண்டு 36 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட்டான போது அவர்கள் பிங்க் பந்தில் அதிக அனுபவத்தை பெறவே இல்லை.
இதுவே அவர்கள் தோல்வி அடையவும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட்டுக்கு முன்பாக பயிற்சி போட்டியிலும் இந்திய அணி பிங்க் பந்தில் தான் பகலிரவு ஆட்டத்தை ஆகியிருந்தது. மேலும் பிங்க் பந்தில் உள்ள நுணுக்கங்களை வலைப்பயிற்சியிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த இரண்டு காரணங்களை தாண்டி ஆஸ்திரேலியா விட இந்திய அணியின் கை அதிகம் ஓங்கி இருப்பதற்கு முக்கிய காரணம் பிட்ச்சின் சூழல் பற்றிய தகவல் தான். ஒரு சில தினங்கள் ஆனாலும் வேகப்பந்து வீச்சுக்கு இந்த பிட்ச் அதிகம் கைகொடுக்கும் என்றும் நாட்கள் செல்லச் செல்ல பேட்டிங் செய்வது கடினமாக அமையும் என்றும் பிட்ச் பராமரிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்தியாவை விட தற்போது ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் தான் மிக மோசமான ஃபார்மில் இருந்து வருகின்றனர். மேலும் ஹர்ஷித் ராணா, பும்ரா, சிராஜ் உள்ளிட்ட அனைத்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல ஃபார்மில் இருப்பது நிச்சயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சவாலான விஷயம் தான். அவர்கள் இந்த சூழலை அறிந்து கொண்டு அடிலெய்டு மைதானத்தில் பழிக்கு பழி வாங்கவும் இந்திய அணி காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.