டி20 உலக கோப்பை இந்திய அணி வென்றதற்கு மத்தியில் நடந்த பல சம்பவங்களுக்கு இடையே தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. சுப்மன் கில் தலைமையில் பல இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இந்த தொடருக்காக ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.
இவர்களை எதிர்த்து சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி முதல் டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்திருந்தது. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த 115 ரன்களைக் கூட எட்ட முடியாமல் கில் தலைமையிலான இந்திய அணி பரிதாபமாக தோல்வி அடைந்திருந்தது. இதனால் மீதம் இருக்கும் போட்டிகளில் இந்திய அணி நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்ற நோக்கில் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
அப்படி ரசிகர்கள் நினைத்ததை போல, இரண்டாவது போட்டியில் அப்பட்டமாக அதனை நிரூபித்துள்ளது கில் தலைமையிலான இந்திய அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
கேப்டன் கில் இரண்டு ரன்களில் நடையைக் கட்ட மீண்டும் முந்தைய ஆட்டத்தை போல நடந்து விடுமோ என்ற அச்சமும் உருவாகி இருந்தது. ஆனால் அபிஷேக் ஷர்மா பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டு ரன் சேர்க்க ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்த படி இருந்தது.
ஹாட்ரிக் சிக்ஸர்கள் எடுத்து தனது முதல் சதத்தை டி20 போட்டிகளில் பதிவு செய்திருந்த அபிஷேக் ஷர்மா, அடுத்த பந்தில் அவுட்டாகி இருந்தார். அவருடன் சிறப்பாக ஆடி ரன் சேர்த்த ருத்துராஜ் 47 பந்துகளில் 77 ரன்கள் எடுக்க, நான்காவது வீரராக உள்ளே வந்த ரிங்கு சிங், 22 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனால் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணியால் கடினமான இலக்கை நெருங்க முடியாமல் தான் போனது. தொடக்க வீரர் வெஸ்லி மட்டும் 43 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்களால் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது.
இந்திய அணி தரப்பில் ஆவேஷ் கான், முகேஷ் குமார், ரவி பிஷ்னாய் ஆகியோர் முக்கிய விக்கெட்டுகளை எடுக்க, ஜிம்பாப்வே அணி 19 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளதுடன் தற்போது தொடரையும் சமன் செய்துள்ளது.
ஒரு போட்டியின் முடிவில் இந்திய இளம் வீரர்களை விமர்சித்த பலருக்கும் தற்போது தக்க பதிலடியையும் அவர்கள் கொடுத்துள்ளனர். மேலும் டி20 சர்வதேச போட்டியில் முதல் சதமடித்த அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகன் விருதினையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.