- Advertisement -
Homeவிளையாட்டுசொதப்பிய கோலி - ரோஹித்.. காப்பாற்றிய சூர்யகுமார் - துபே.. தட்டுத் தடுமாறி இந்தியா வென்றது...

சொதப்பிய கோலி – ரோஹித்.. காப்பாற்றிய சூர்யகுமார் – துபே.. தட்டுத் தடுமாறி இந்தியா வென்றது எப்படி..

- Advertisement-

குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக யார் முன்னேறுவார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் மோதிய போட்டி அமைந்திருந்தது. இதற்கு முன்பு இந்திய அணி மோதி இருந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களின் பந்துவீச்சின் காரணமாக தான் அந்த வெற்றியை உறுதியாக பெற முடிந்திருந்தது.

நியூயார்க் பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தவறான ஷாட்களை அடித்து அவுட்டாகி இருந்தது தான் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது. அதிலும் இந்திய அணி நட்சத்திர வீரர்கள் விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி இருந்ததால் அவருக்கு எதிரான கருத்துகள் அதிகமாக இருந்தது.

ரிஷப் பந்தை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் களத்தில் நிலைத்து நிற்க முடியாமல் தடுமாறி வருவதால் இந்திய அணி சூப்பர் 8 முன்னேறுவதற்கு முன்பாக அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்ற சூழலும் இருந்தது. அப்படி இருக்கையில் தான் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகளை வீழ்த்தி இருந்த அமெரிக்காவை மூன்றாவது போட்டியில் சந்தித்திருந்தனர்.

இதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 110 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால் அமெரிக்காவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. அது மட்டுமில்லாமல் ஒரு மைதானத்தில் 110 ரன்கள் என்பதே சற்று சவாலான ஸ்கோராக இருக்கும் சூழலில் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் பேட்டிங்கும் அப்படித்தான் அமைந்திருந்தது.

- Advertisement-

முதல் இரண்டு போட்டிகளில் முறையே ஒன்று மற்றும் நான்கு ரன்களில் அவுட்டாகி இருந்த விராட் கோலி அமெரிக்காவுக்கு எதிராக கோல்டன் டக்காகி அதிர்ச்சி கொடுத்திருந்தார். இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் மூன்று ரன்கள் எடுத்து அவுட்டாக இந்திய அணி பத்து ரன்களுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. இந்த இரண்டு விக்கெட்டுகளையும் இந்திய வம்சாவளி வீரரான சௌரப் நெட்ராவல்கர் எடுக்க, ரிஷப் பந்த்தும் 18 ரன்களில் நடையைக் கட்டினார்.

39 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்துக் கொண்டிருந்த சூழலில் அப்போது கைகோர்த்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இந்திய அணி 10 ஓவர்களில் 50 ரன்கள் கூட தொடாமல் இருந்தாலும் மேலும் விக்கெட் விழாமல் இவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டதால் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

16 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ரன்களை இந்தியா சேர்க்க கடைசி 4 ஓவர்களில் 24 ரன்கள் வேண்டும் என்ற நிலையும் உருவாகி இருந்தது. ஆனால், அதன் பின்னர் சூர்யகுமார் அதிரடி காட்ட, 10 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி வெற்றி பெற்றது. சூர்யகுமார் 50 ரன்களும், ஷிவம் துபே 31 ரன்களும் எடுக்க, சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி உள்ளது இந்திய அணி.

சற்று முன்