இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் 26 நாட்களே இருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை மொத்தமாக 48 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 5 போட்டிகள் நடக்கவுள்ளது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளும் உலகக்கோப்பை அணியை அறிவித்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்த உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் அணிகளில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் முன்னிலை வகிக்கின்றன.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பேசும் போது, என்னை பொறுத்தவரை உலகக்கோப்பையை வெல்வதற்கு ஆசிய அணிகளுக்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் ஆடுகளம் மற்றும் சூழலை பற்றி ஆசிய அணிகளுக்கு நல்ல பழக்கம் உண்டு.
ஆசிய ஆடுகளங்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை விடவும் ஆசிய அணிகளால் நன்றாக செயல்பட முடியும். கடந்த ஆண்டு இங்கிலாந்து சொந்த மண்ணில் தான் உலகக்கோப்பை வென்றது. ஆனால் இப்போது நியூசிலாந்து அணியிடம் டி20 கிரிக்கெட்டில் தோல்வியை சந்தித்து வருகிறார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
இலங்கை அணியும் நன்றாக விளையாடி வருகிறது. ஒவ்வொரு அணிக்கும் பலமும், பலவீனமும் இருக்கிறது. உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்று யாராலும் சரியாக கணிக்க முடியாது. அதில் நாக் அவுட் போட்டிகள் என்று வந்துவிட்டால், எதுவும் நிச்சயமாக சொல்ல முடியாது. அதேபோல் அனைத்து அணிகள் சிறந்த அணியாகவே இருக்கிறார்கள்.
அடிப்படைகளை சரியாக புரிந்து கொண்டு வீரர்களை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் என்னிடம் யார் வெல்வார்கள் என்று கேட்டால், சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணிக்கு அதிக சாதகம் இருப்பதாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். கடைசியாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை இந்திய அணி சொந்த மண்ணில் தான் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.