இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூலமாக உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளனர். இதற்காக அனைத்து அணிகளும் கடந்த வாரமே இந்தியா வந்து முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக பாகிஸ்தான் அணி 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்தியா வந்துள்ளது. அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் முதல் முறையாக இந்திய மண்ணில் கிரிக்கெட் விளையாடவுள்ளனர். இதனால் 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்த பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு நாளும் அவர்களை காண ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த இரு அணிகளும் அக்.14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் மோதவுள்ளன. 1.35 லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளதால், போட்டி மீதான எதிர்பார்ப்பு வானளவிற்கு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணியை இந்தியா 7 முறை வீழ்த்தி இருக்கிறது. அதேபோல் இந்திய அணியை பாகிஸ்தான் அணியால் ஒருமுறை கூட உலகக்கோப்பை தொடரில் வீழ்த்த முடிந்ததில்லை. இதனால் இந்த சாதனையை தக்க வைக்க வேண்டும் என்பது இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசும் போது, சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் தான். அதேபோல் பாகிஸ்தான் அணியுடனான போட்டி மிகவும் முக்கியம். இந்தியாவில் உள்ள ரசிகர்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எப்படியாவது இந்தியா வெல்ல வேண்டும் என்றே கூறுவார்கள். என்னை பொறுத்தவரை இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.