ஏறக்குறைய இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியை போலத்தான் மீண்டும் ஒரு சம்பவம் இரண்டாவது போட்டியிலும் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா கேப்டன் அசலங்கா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார். கொழும்பு மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் சாதகமாக இருந்து வரும் சூழலில் இந்த போட்டியிலும் அப்படித்தான் நடந்துள்ளது.
இலங்கை அணி முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், இரண்டாவது விக்கெட்டிற்கு இணைந்த அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். ஆனால் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து அவுட்டான சூழலில் திடீரென நிறைய விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது இலங்கை அணி.
136 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்த இலங்கை ரன் சேர்க்க திணற, வெல்லாலகே மற்றும் கமிந்து மெண்டிஸ் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்ததால் அவர்கள் 200 ரன்களையும் கடந்திருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்களையும் இலங்கை அணி எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கீட்டுகளையும் சிராஜ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அடிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா முதல் ஒருநாள் போட்டியை போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அணியின் ஸ்கோர் 97 ஆக உயர்ந்த போது 44 பந்துகளில் 5 ஃபோர்கள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 64 ரன்கள் சேர்த்த ரோஹித் ஷர்மா அவுட் ஆகி இருந்தார். இதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான கில்லும் 35 ரன்களில் அவுட்டாக இந்திய அணியும் விக்கெட்டுகளை இழந்து தடுமாற தொடங்கியது.
கோலி 14 ரன்களிலும், ஷிவம் துபே மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, ஷ்ரேயஸ் ஐயரும் 7 ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் 147 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. இன்னொரு பக்கம் இந்த ஆறு விக்கெட்டுகளையும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வண்டர்சை தான் வீழ்த்தி இருந்தார்.
இதன் பின்னர் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைந்து நிதானமாக ரன் சேர்த்தனர். ஆனால் அவர்களும் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து அவுட்டாக, இந்திய அணி 190 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் சிராஜும் 4 ரன்களில் அவுட்டாகினார். இதனையடுத்து தத்தளித்த இந்திய அணிக்கு கைவசம் ஒரு விக்கெட் இருக்க, 58 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் 208 ரன்களை இந்திய அணி எடுத்திருந்த போது அர்ஷ்தீப் சிங் ரன் அவுட்டாக, இந்திய அணி ஆல் அவுட்டானது. இதனால், இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. குறைவான இலக்கை கூட எட்ட முடியாமல், ரோஹித் சிறந்த அதிரடி தொடக்கத்தை கொடுத்தும் அதனை பயன்படுத்த தவறிய இந்திய அணியின் பேட்டிங் வரிசையை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.