இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை அபாரமாக வென்றிருந்த நிலையில் அது தொடர்பான கொண்டாட்டம் தான் கடந்த ஒரு வாரங்களாக இணையதளத்தையும் ஆக்கிரமித்து வந்தது. அப்படி ஒரு சூழலில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது ஓய்வுக்கு பின்னர் இந்திய அணி டி20 தொடரில் ஜிம்பாப்வேவை எதிர்த்து தற்போது ஆடி வருகிறது.
இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் ஐபிஎல் தொடரில் கலக்கிய பல வீரர்கள் இதிலும் இடம் பிடித்துள்ளனர். அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், துருவ் ஜூரேல் உள்ளிட்ட வீரர்கள் டி20 போட்டிகளில் அறிமுகமாகி இருந்தனர். ஆனாலும், ஜிம்பாப்வேவிற்கு எதிராக அவர்கள் ஆடிய விதம், பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் தான் எடுத்திருந்தது.
இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய், 4 ஓவர்கள் வீசி 2 ஓவர் மெய்டனுடன் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதேபோல மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தரும் நான்கு ஓவர்களில் 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என எதிர்பார்த்தால் 61 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
கில் மட்டும் 31 ரன்கள் எடுக்க, மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. இறுதியில், வாஷிங்டன் சுந்தரின் போராட்டமும் வீணாக இந்திய அணி 102 ரன்களில் ஆல் அவுட்டாகி அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது. இளம் வீரர்கள் இருந்தும் இந்திய அணி கோட்டை விட்டுள்ள நிலையில், இது பற்றி பல விதமான கருத்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த பின் இந்திய அணி ஆடிய முதல் போட்டியின் முடிவு தோல்வியாக அமைந்திருந்தாலும் அதில் மற்ற சில விஷயங்களும் அரங்கேறி உள்ளது. அதன்படி, இந்திய அணி முதல் முறையாக ஜிம்பாப்வேவிற்கு எதிராக ஒரு டி20 போட்டியில் ஆல் அவுட்டாகி உள்ளது.
தொடர்ந்து, 120 ரன்களுக்கும் குறைவான இலக்கை எட்டிப் பிடிக்கும் போது முதல் முறையாக தோல்வி அடைந்துள்ளனர். இதே போல, தொடர்ச்சியாக 12 டி20 சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணியின் பயணத்திற்கு தற்போது முட்டுக்கட்டையும் விழுந்துள்ளது. இவை அனைத்தும் ஒரே போட்டியில் நடைபெற்றுள்ளதால் நிச்சயம் அடுத்த போட்டியில் இந்திய அணி கம்பேக் கொடுக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.