- Advertisement -
Homeவிளையாட்டுஏமாற்றிய சஞ்சு சாம்சன்.. காப்பாற்றிய ஜெய்ஸ்வால்.. மழை குறுக்கிட்டும் தொடரை சொந்தமாக்கிய இந்தியா..

ஏமாற்றிய சஞ்சு சாம்சன்.. காப்பாற்றிய ஜெய்ஸ்வால்.. மழை குறுக்கிட்டும் தொடரை சொந்தமாக்கிய இந்தியா..

- Advertisement-

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகி இருந்தது. இதன் முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டாவது போட்டியும் முடிவுக்கு வந்துள்ளது.

டாஸ் போடுவதற்கு முன்பாக இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக ஆரம்பமான நிலையில், அதனை வென்றிருந்த சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடிய இலங்கை அணி முதல் போட்டியை போலவே இந்த முறையும் அதிரடியான ஆட்டத்தை ஆரம்பத்தில் கையில் எடுத்திருந்தது. ஓவருக்கு 9 முதல் 10 ரன்கள் வீதம் அடித்து வந்த இலங்கை அணி, 15 ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 130 ரன்கள் எடுத்திருந்தது.

இதனால் முந்தைய போட்டியில் கோட்டை விட்ட விஷயத்தை இந்த முறை சரி செய்து நல்ல ஸ்கோரை அடிப்பார்கள் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் போட்டியில் எப்படி மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் சொதப்பினார்களோ அதே போல இந்த முறையும், மீதம் இருக்கும் ஐந்து ஓவர்களில் 31 ரன்கள் மட்டும் எடுத்து இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதனால் 20 ஓவர்களில் அவர்கள் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். குசல் பெரேரா அதிகபட்சமாக 53 ரன்கள் எடுக்க இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

- Advertisement-

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியிருந்த இந்திய அணி, 3 பந்துகளில் 6 ரன்கள் மட்டும் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போட்டி தடைபட, ஓவர்களும் குறைக்கப்பட்டது. இந்திய அணி 8 ஓவர்களில் 78 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற சூழலும் உருவாக, போட்டி விறுவிறுப்பாக மாறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆடியிருந்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ், 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டாக, தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடி காட்டியதால் இந்திய அணியின் வெற்றியும் எளிதாக மாறி இருந்தது. 15 பந்துகளில் 30 ரன்களை ஜெய்ஸ்வால் எடுக்க, கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் இணைந்து போட்டியை முடித்து வைத்தனர்.

78 ரன்களை 7 ஓவர்களில் இந்திய அணி எட்ட, இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரையும் இலங்கை மண்ணில் அவர்கள் வென்றுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி, ஜூலை 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சற்று முன்