பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருந்தது. இந்த தொடர் முதல் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை மாற்றி விட்டு அவருக்கு இந்த பதவி கொடுத்தது பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தது.
ஆனாலும் நிச்சயம் இதையெல்லாம் தாண்டி கவுதம் கம்பீர் பயிற்சியாளராக இருக்க, சூர்யகுமாரும் ஒரு கேப்டனாக சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் தான் கேப்டனாகவும் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அமர்க்களப்படுத்தி இருந்தார் சூர்யகுமார் யாதவ்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்ய அதன்படி ஆடிய இந்திய அணியில் அனைத்து வீரர்களும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்திருந்தனர். தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 40 ரன்களும், சுப்மன் கில் 16 பந்துகளில் 34 ரன்களும் எடுக்க பின்னர் வந்த கேப்டன் சூர்யகுமாரும் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து அவுட்டாகி இருந்தார்.
இதன் பின்னர் வந்த ரிஷப் பந்த், ஆரம்பத்தில் நிதானமாக ஆடினாலும் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 49 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் வந்த வீரர்கள் ரன் சேர்க்கத் திணறினாலும் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, ஆரம்பத்திலிருந்து நிதானமாக ஆடி ரன் சேர்த்து கொண்டிருக்க, திடீரென அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். இதனால், 5 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழக்காமல் 49 ரன்கள் சேர்க்க, போட்டியும் விறுவிறுப்பானது.
தொடர்ந்து ஆடிய அவர்கள், கொஞ்சம் கூட துவண்டு போகாமல் ஆட, சிறப்பாக ரன் சேர்த்துக் கொண்டிருந்த குஷால் மெண்டிஸ் 45 ரன்கள் சேர்த்து அவுட்டாகி இருந்தார். இன்னொரு புறம் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த நிஷாங்கா 79 ரன்களில் அக்சர் படேல் பந்து வீச்சில் அவுட்டானார். 140 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி, அடுத்த 9 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
இந்த இரண்டையும் அக்சர் படேல் எடுக்க, போட்டி இந்திய அணியின் பக்கமும் மாறி இருந்தது. இதனிடையே, கடைசி 5 ஓவர்களில் இலங்கை அணியின் வெற்றிக்கு 65 ரன்கள் வேண்டுமென்ற நிலையும் உருவாகி இருந்தது. ஆனால் இதன் பின்னரும் முக்கியமான விக்கெட்டுகளை அவர்கள் இழந்ததால் தோல்வி அடையும் சூழலும் உருவாகி இருந்தது.
ஒரு கட்டத்தில் வெற்றி பெறுவார்கள் என கருதப்பட்ட இலங்கை அணி, 140 ரன்களில் இருந்து 30 ரன்கள் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இதனால், 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி, 170 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆரம்பத்தில் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த இலங்கை அணி, திடீரென பெட்டி பாம்பாய் சுருண்டு போனது. இதனால், 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி.