இந்திய அணிக்காக ஆடிய அனுபவம் வாய்ந்த வீரர்களும் இதுவரை அறிமுகமாகாத இளம் வீரர்களும் அடங்கிய துலீப் டிராபி தொடர் தற்போது ஆரம்பமாகி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில், குல்தீப் யாதவ், அக்சர் படேல் உள்ளிட்ட பல அனுபவம் வாய்ந்த வீரர்களும் இந்த தொடரில் இடம் பிடித்திருக்க, இந்தியா ஏ, பி, சி மற்றும் டி என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
.
இதில் எதிர்பார்த்த வீரர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க, இன்னொரு பக்கம் நிறைய இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை மிக கச்சிதமாகவும் பயன்படுத்தி முத்திரை பதித்து வருகின்றனர். இதன் காரணமாக நிச்சயம் இனி வரும் சர்வதேச போட்டிகளில் அவர்களுக்கான வாய்ப்பு கிடைப்பதற்கான கதவுகளும் தற்போது திறந்து உள்ளதாகவே தெரிகிறது.
இதற்கு மத்தியில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது.
துலீப் டிராபி தொடரில் அதிகம் கவனம் பெற்றிருக்கும் இளம் வீரர்கள் இந்த தொடரின் மூலம் இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என கருதப்பட்ட நிலையில், பெரிய அளவில் மாற்றங்கள் நிகழவில்லை என்றே தெரிகிறது. ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் டாப் வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து சர்ப்ராஸ் கான், ரிஷப் பந்த் மற்றும் துருவ் ஜூரேல் உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வாகியுள்ள நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ராவை தவிர இரண்டு இளம் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
துலீப் டிராபி தொடரில் இடம்பிடித்து ஆடிவரும் ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தற்போது இந்திய அணிக்காகவும் தேர்வாகி உள்ளனர். இதில் ஆகாஷ் தீப் ஏற்கனவே இந்திய அணிக்காக ஆடிவரும் நிலையில் யாஷ் தயாள் இடம் பிடித்துள்ளது தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.
இதில் மற்றொரு சிறப்பம்சமாக யாஷ் தயாள், ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் என மூன்று பேருமே ஆர்சிபி அணியில் இணைந்து ஆடிய வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.