டி20 உலக கோப்பை தொடரை வென்றதன் பின்னர் ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் ஆடியிருந்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக டெஸ்ட் தொடர்களிலும் ஆடவுள்ளது. செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டி தொடர்களில் மோத உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டெஸ்ட் போட்டிகளும் இந்திய மண்ணில் நடைபெற உள்ளது. பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்கள் முடிந்தவுடன் தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணி, அங்கே 4 டி20 போட்டி கொண்ட தொடரிலும் ஆட உள்ளது.
ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கம்பீர், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் தான் இந்திய டெஸ்ட அணியை பயிற்சியாளராக வழி நடத்த உள்ளார். இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்திய ரசிகர்களுக்கு காத்திருக்க இவை அனைத்தையும் விட ஒரு முக்கியமாக தொடராக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது தான் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலிய மண்ணில் இதே தொடரில் இரண்டு முறையும் இந்திய அணி தொடரை கைப்பற்ற அதனை மூன்றாவது முறையாக வெல்லவும் அவர்கள் முனைப்பு காட்ட உள்ளனர். அதே வேளையில், தங்கள் மண்ணிலேயே வென்ற இந்திய அணியை இந்த முறை நிச்சயம் ஆஸ்திரேலிய அணி பழிவாங்கும் நோக்கத்தில் களமிறங்கும் என்றே தெரிகிறது.
நவம்பர் மாதம் ஆரம்பமாக உள்ள இந்த தொடர் முடிந்த பின்னர் இந்திய மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு சில தொடர்களை ஆடவுள்ளது. பிப்ரவரி மாதம் இந்த தொடர் நடைபெற உள்ள நிலையில் இதன் பின்னர் ஐபிஎல் தொடர் வரும் என்பதால் இந்திய அணிக்கு பெரிதாக வேறு தொடர்கள் இருக்காது.
அப்படி ஒரு சூழலில் ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி மோதி உள்ள தொடர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறலாம் என தகவல் தெரிவிக்கும் நிலையில் அந்த தொடர் முடிவடைந்த பின்னர் அதே இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
ஜூன் மாதம் 20 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி வரை நடைபெறும் என்றும் தற்போது வெளியான போட்டியின் அட்டவணை மூலம் தெரிய வருகிறது.