15 ஆண்டுகளுக்கு பின் ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது. ஹைபிரிட் மாடலில் நடத்தப்படும் ஆசியக் கோப்பை தொடரில் 4 போட்டிகள் பாகிஸ்தான் மண்ணிலும், 9 போட்டிகள் இலங்கை மண்ணிலும் விளையாடப்படுகின்றன. இதில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பாததால், இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.
ஆசியக் கோப்பை முதல் போட்டியில் நேபாளம் அணியை எதிர்த்து பாகிஸ்தான் களமிறங்கியது. இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பேட்டிங் பயிற்சி செய்ய நினைத்து டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் பின் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தார்.
தில் அதிகபட்சமாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 151, இஃப்திகர் அஹ்மத் 109 ரன்களும் விளாசினர். இருவரின் சதத்தால் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் உச்சத்தை எட்டியது. இதையடுத்து 343 என்ற இமாலய இலக்கை விரட்டிய நேபாளம் அணி, 104 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றிக்கு காரணமாக கேப்டன் பாபர் அசாம் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதுகுறித்து பாபர் அசாம் பேசும் போது, நான் களமிறங்கிய போது பந்து சரியாக பேட்டிற்கு வரவில்லை என்பதை உணர்ந்துகொண்டேன். இதனால் ரிஸ்வான் உடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைப்பதே திட்டமாக இருந்தது. அதன்பின் சில நேரங்களில் ரிஸ்வானுக்கு நானும், எனக்கு அவரும் ரன்கள் குவிக்க உதவியாக இருந்தோம்.
அதன்பின் இஃப்திகர் அஹ்மத் களமிறங்கி வேற மாதிரி இன்னிங்ஸை ஆடினார். அவர் களமிறங்கிய உடன், நேரடியாக சென்று அவரின் இயற்கையான அதிரடியை விளையாட அறிவுறித்தினேன். ஏனென்றால் 2 பவுண்டரிகளை விளாசிய பின் அவர் கூடுதல் நம்பிக்கையுடன் காணப்பட்டார். அதன்பின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் இருவருமே சிறப்பாக செயல்பட்டார்கள்.
இந்த இமாலய வெற்றி எங்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்திற்கு எப்போதும் மிகப்பெரிய பரபரப்பு இருக்கும். அதிலும் வெற்றிபெற நிச்சயம் போராடுவோம் என்று தெரிவித்துள்ளார். செப்.2ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.