- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதென்னடா பேஸ்பாலுக்கு வந்த சோதனை.. 40 ஓவரில் முடிந்த கதை.. இந்திய அணி படைத்த அபார...

இதென்னடா பேஸ்பாலுக்கு வந்த சோதனை.. 40 ஓவரில் முடிந்த கதை.. இந்திய அணி படைத்த அபார சாதனை..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது மோதி வந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை வகித்து பட்டையைக் கிளப்பி உள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சை ஆடி இருந்த இந்திய அணி, ரோஹித் மற்றும் ஜடேஜா ஆகியோருடைய சதத்தின் உதவியால் 445 ரன்கள் குவித்திருந்தது. அறிமுக வீரர் சர்பராஸ் கானும் அரைச்சதம் அடிக்க இந்திய அணி நல்லதொரு தொடக்கத்தை அமைத்திருந்தது.

இதன் பின்னர் தங்களின் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 319 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் பென் டக்கட் 153 ரன்கள் எடுத்திருந்தார். இதனையடுத்து தங்களின் இரண்டாவது இன்னிங்சை அதிக ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 19 ரன் எடுத்து அவுட்டானார். இதன் பின்னர் கைசேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகிய இருவருமே மிகச் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.

அதிலும் கடந்த டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து அசத்தியிருந்த ஜெய்ஸ்வால், இந்த முறையும் இரட்டைச் சதத்தை அதிக ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்கள் என பறக்க விட்டு கடந்திருந்தார். கடந்த 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் ஒரு டெஸ்ட் தொடரில் 20 சிக்ஸர்கள் அடிப்பதும் இதுதான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறிய ஜெய்ஸ்வாலுடன் இணைந்து கடைசி கட்டத்தில் ஆடிய சர்பராஸ் கான், தனது முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கடந்து சாதனை புரிந்துள்ளார். இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 430 ரன்கள் குறித்து டிக்ளேர் செய்ய இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் என்ற கடினமான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

- Advertisement 2-

இதனை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி சிறிய இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பேஸ்பால் ஆட்டத்தில் பெயர் போன இங்கிலாந்து அணி, இந்த முறை 100 ரன்களை தொடவே சிரமப்பட்டது. முன்னதாக, சில தனிப்பட்ட காரணங்களால் விலகி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், மீண்டும் அணியில் சேர்ந்து ஃபீல்டிங் மற்றும் பந்து வீச்சையும் மேற்கொண்டிருந்தார்.

வழக்கம் போல ஜோ ரூட், பேர்ஸ்டோ என முன்னணி வீரர்கள் ரன் எடுக்கவே தடுமாற, மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால், இங்கிலாந்து அணி 122 ரன்களில் ஆல் அவுட்டாக இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. மேலும், டெஸ்டில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகவும் இது பதிவாகி உள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெடுகளை கைப்பற்றி இருந்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4 வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 23 ஆம் தேதியன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது.

சற்று முன்