- Advertisement -
Homeவிளையாட்டுபடுதோல்வியான பாக்கிஸ்தான்... புள்ளி பட்டியலில் மிகப்பெரிய மாற்றம்.. இந்திய அணிக்கு பைனல் வாய்ப்பு எப்படி உள்ளது?

படுதோல்வியான பாக்கிஸ்தான்… புள்ளி பட்டியலில் மிகப்பெரிய மாற்றம்.. இந்திய அணிக்கு பைனல் வாய்ப்பு எப்படி உள்ளது?

- Advertisement-

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டி கொழும்பு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. 4 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால், ஆட்டம் ரிசர்வ் டேவுக்கு ஒத்திவைக்கப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதன்பின் இன்று ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இந்திய அணி 24.1 ஓவர்களில் இருந்து ஆட்டத்தை தொடங்கியது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 122 ரன்களும், கேஎல் ராகுல் 111 ரன்களும் விளாசினர். இவர்களின் சதம் காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 357 என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதன் பின் பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் – ஃபகர் ஜமான் கூட்டணி களமிறங்கியது. இதில் இமாம் உல் ஹக் 9 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பின் நிதானம் காட்டிய கேப்டன் பாபர் அசாம் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 10 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர்.

அதனை தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. 25 நிமிடங்களுக்கு பின் ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது, ஷர்துல் தாக்கூர் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரிலேயே ரிஸ்வான் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து குல்தீப் யாதவ் அட்டாக்கில் வந்தார். அவர் வந்த பின் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

- Advertisement-

ஃபக்கர் ஜமான் 27 ரன்களிலும், ஆகா சல்மான் 23 ரன்களிலும், ஷதாப் கான் 7 ரன்களிலும், இஃப்திகார் அஹ்மத் 23 ரன்களும், ஃபஹீம் அஹ்ரப் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை ஒப்புக் கொண்டது. பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா இருவரும் தசை பிடிப்பு பிரச்சனையால் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. குல்தீப் யாதவ் இதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த தோல்வியின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது. அதே சமயம் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி பலப்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கடுத்து இந்திய அணியானது செப்டம்பர் 12-ஆம் தேதி இலங்கை அணியையும், அதற்கடுத்து செப்டம்பர் 15-ஆம் தேதி பங்களாதேஷ் அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது. இந்த இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு செல்வது உறுதி.

சற்று முன்