வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற முன்னிலையில் இருந்ததால், இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாட, கைல் மயர்ஸ் 7 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான கிங் 18 ரன்களிலும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 1 ரன்னிலும், கேப்டன் பாவெல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 57 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
பின்னர் ஹோப் – ஹெட்மயர் இணை கூட்டணி சேர்ந்து அதிரடியை தொடங்கியது. இருவரும் சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய ஹோப் 45 ரன்களில் ஆட்டமிழக்க, ஃபினிஷர் ரோலை எடுத்துக் கொண்ட ஹெட்மயர் பொளந்து கட்டி அரைசதம் கடந்தார். இறுதியாக அவரும் 39 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 179 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இந்திய அணியின் சுப்மன் கில் – ஜெய்ஸ்வால் இணை களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகள் அடிக்க, 3வது ஓவரில் பவுண்டரி எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. இதன்பின் சுப்மன் கில் சிக்சர் விளாச, 5 ஒவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 50 ரன்களை கடந்தது. ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரும், பவுண்டரியுமாய் பறந்து கொண்டே இருந்தது.
இதன் காரணமாக 10 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 30 பந்துகளில் அரைசதம் விளாச, மறுமுனையில் ஆடிய ஜெய்ஸ்வால் 33 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை விளாசினார். இதையடுத்து இருவரின் அதிரடியும் அடுத்த கட்டத்திற்கு சென்றது. 14 ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணி 150 ரன்களை கடந்தது.
அதேபோல் இந்திய அணிக்காக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற ரோகித் சர்மா – கேஎல் ராகுல் சாதனையையும் இருவரும் முறியடித்தனர். இந்த நிலையில் சுப்மன் கில் 47 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் திலக் வர்மா களமிறங்கினார்.
ஆனால் அவருக்கு பெரிய வேலை கொடுக்காமல் ஜெய்ஸ்வாலே ஆட்டத்தை முடித்து வைத்தார். இறுதியாக 17 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதேபோல் தொடரும் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது.