2024 ஆம் ஆண்டு நடந்த 17 வது ஐபிஎல் சீசன் மிக விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், கொல்கத்தா அணி 3 வது முறையாக ஐபிஎல் கோப்பையை சொந்தமாக்கி உள்ளது. கடந்த 2012 மற்றும் 14 ஆகிய ஆண்டுகளில் கவுதம் கம்பீர் கேப்டனாக இருந்த போது கோப்பையை வென்ற கொல்கத்தா அணி, தற்போது ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தி உள்ளது.
இந்த சீசனின் தொடக்கத்திலேயே கொல்கத்தா அணி பலமாக திகழ்ந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள் நிச்சயம் அவர்களுக்கு கோப்பையை வெல்வதில் நெருக்கடியை கொடுக்கும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் அனைவரும் தொடர்ந்து கடினமாக உழைத்து தங்களின் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவும் காரணமாக அமைந்திருந்தனர். ரசல், சுனில் நரைன், ஷ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணா, பிலிப் சால்ட், வருண் சக்கரவர்த்தி, மிட்செல் ஸ்டார்க் என கொல்கத்தா அணியில் ஆடிய அனைத்து வீரர்களுமே கிடைக்கும் வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி ஆடியதால் லீக் சுற்றின் முடிவில் முதலிடத்தையும் பிடித்து அதிக ரன் ரேட்டையும் பெற்றிருந்தனர்.
அதே உத்வேகத்துடன் குவாலிஃபயர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இறுதி போட்டியிலும் மீண்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை சொந்தமாக்கி இருந்தது. இதனிடையே, அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்பாக நிச்சயம் மெகா ஏலம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், 3 முதல் 4 வீரர்கள் வரை தான் ஒரு அணியால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் தெரிகிறது.
இந்நிலையில் தான், அடுத்த சீசனில் லீக் சுற்றில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரையில், ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் ஒரு அணி 14 போட்டிகள் ஆடி வந்தது. 7 போட்டிகளை தங்களின் சொந்த மைதானத்திலும், 7 போட்டிகளை எதிராணியினரின் மைதானத்திலும் ஆடி வந்தனர்.
அதிலும், 10 அணிகள் ஆனதன் பின்னர், தங்களின் க்ரூப்பில் இருக்கும் அணிகளுடன் ஒரு போட்டியும், மற்ற பிரிவில் இருக்கும் அணியுடன் 2 போட்டிகளும் ஒரு அணி ஆடி வந்தது. அப்படி இருக்கையில் தான், 2025 மற்றும் 26 ஆம் ஆண்டில் ஐபிஎல் சீசனில் ஒரு அணி 16 லீக் போட்டிகளில் ஆட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, 8 போட்டிகளை தங்களின் மைதானத்திலும் ஒரு அணி ஆடவிருக்கும் சூழலில், இறுதி போட்டியுடன் சேர்த்து 84 போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிகிறது. இதனிடையே, 2027 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு 18 லீக் போட்டிகள் வரை இருக்கலாம் என்றும் மேலும் தகவல்கள் கூறுகின்றது.
அதிக லீக் போட்டிகள் இருப்பதால் இதுவரை கோப்பையை வெல்லாமல் இருக்கும் ஆர்சிபி உள்ளிட்ட அணிகளுக்கும், அணி வீரர்களை சரியாக தேர்ந்தெடுத்து, போட்டிக்கு போட்டி நிறைய யுக்திகளை மேற்கொண்டால் நிதானமாக ஆலோசித்து லீக் போட்டிகளில் தவறுகளை சரி செய்ய நல்வாய்ப்பு அமையும் என்றே தெரிகிறது.