இந்திய அணி கண்ட சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக ஜொலித்தவர் இர்பான் பதான். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான சூழலில் சுமார் 9 ஆண்டுகள் மிக அசத்தலாக ஆடி வந்தார். டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 தொடர் என எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இர்பான் பதான் ஆடினாலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தனக்கான முத்திரையை அற்புதமாக பதிக்கக் கூடியவர்.
அதே போல, 2007 ஆம் ஆண்டு நடந்த முதல் டி 20 உலக கோப்பையை வெல்லவும் முக்கிய பங்கு வகித்த இர்பான் பதான், சர்வதேச போட்டிகளில் ஏனோ தனது 29 வது வயதுக்கு பிறகு தொடர்ந்து ஆட முடியாமல் போனது. ஒரு பக்கம் புது புது வீரர்கள் இந்திய அணியில் கால் பதிக்க, அதனால் இர்பான் பதான் இடம் பறிபோனதாகவும் ஒரு பரவலான விமர்சனம் அந்த சமயத்தில் இருந்து வந்தது. தொடர்ந்து தனக்கு வாய்ப்புகள் அதிகம் வராததால் 2020 ஆம் ஆண்டு தனது ஓய்வினையும் இர்பான் பதான் அறிவித்திருந்தார்.
இன்னொரு பக்கம், கடந்த 2017 ஆம் ஆண்டு வரை, சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ், பஞ்சாப். டெல்லி உள்ளிட்ட அணிகளுக்காக ஐபிஎல் தொடரிலும் இர்பான் பதான் ஆடி வந்தார். அதன் பின்னர், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் இர்பான் பதான், பல போட்டிகளில் வர்ணனையாளராக செயல்புரிந்து வருகிறார்.
மேலும் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறும் வீரர்கள் கலந்து கொள்ளும் தொடர்களிலும் ஆடி வரும் இர்பான் பதான், சமீபத்தில் நடந்து முடிந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் பில்வாரா கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் செயல்பட்டிருந்தார். அதிலும் இந்தியா கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் எடுத்து பலரையும் மிரண்டு போக வைத்திருந்தார்.
இதனிடையே, இர்பான் பதானின் சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவடைய முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி தான் காரணம் என ரசிகர் ஒருவர் கூற, இதற்கு இர்பான் பதான் கொடுத்த பதில் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. இது தொடர்பான ரசிகர் பதிவில், “நான் எப்போதெல்லாம் மற்ற லீக் தொடர்களில் இர்பான் பதானை பார்க்கிறேனோ, அப்போதெல்லாம் தோனி மற்றும் நிர்வாகத்தை தான் சபிக்கிறேன். 29 வயதிலேயே உங்களின் கிரிக்கெட் பயணம் முடிய காரணம் அவர்கள் தான். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் நீங்கள் சிறப்பாக ஆடிய போதும் உங்களை அணியில் இருந்து ஒதுக்கி விட்டனர்” என ஆவேசத்துடன் தோனியை விமர்சனம் செய்திருந்தார்.
இதனைக் கவனித்த இர்பான் பதான், “யாரையும் நாம் குற்றம் சொல்ல வேண்டாம். உங்கள் அன்பிற்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.