சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் இறுதி லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாட உள்ளது. இந்த போட்டி சென்னை அணிக்கு ஒரு கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய போட்டியாகும். ஒரு வேளை இந்த போட்டியில் சிஎஸ்கே தோற்றால் ப்ளே ஆஃப்க்கு செல்லுமா என்றால் அதற்கு சில அணிகள் வெற்றி பெற வேண்டும் சில அணிகள் தோற்க வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 7-ல் வெற்றியும் 5-ல் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. அதனால் 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிஎஸ்கே டெல்லியை வீழ்த்தும் பட்சத்தில் 17 புள்ளிகளோடு இரண்டாம் இடத்திலேயே இருக்கும். இதன் மூலம் நேரடியாக குவாலிபையருக்கு தகுதி பெறும்.
ஒரு வேளை டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோற்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகள் இன்னும் ஒரு வெற்றி பெற்றாலே புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவை தாண்டி விடும்.
மறுபுறம், CSK ஐ முந்த பெங்களூ அணி தங்களுக்கு மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளை பெற வேண்டும். ஒரு வேளை லக்னோ மற்றும் மும்பை தங்கள் அடுத்த போட்டியில் வென்று, பெங்களூர் அணியும் தங்கள் இரண்டு போட்டிகளிலும் வென்றால் சிஎஸ்கே ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்படும். இதன் மூலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழக்கும்.
அதனால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளுக்காக சிஎஸ்கே காத்திருக்காமல், டெல்லி அணியை வீழ்த்தி நேரடியாக ப்ளே ஆஃப் செல்ல வேண்டும் என்பதே இப்போது சிஎஸ்கே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.