டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற சூழலில் அடுத்து 10 தினங்களிலேயே ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரும் ஆரம்பமாகி உள்ளது. இதனால் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இதில் அபிஷேக் ஷர்மா, ரியன் பராக், ரிங்கு சிங் உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும் இஷான் கிசானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஐபிஎல் தொடருக்கும் முன்பாக அவரும் ஷ்ரேயஸ் ஐயரும் தொடர்ந்து நிறைய சர்வதேச போட்டிகள் மற்றும் முதல் தர போட்டிகளில் ஆடாமல் இருந்து வந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அவர்கள் இரண்டு பேரின் பெயரும் வருடாந்திர சம்பள பட்டியலில் இருந்தும் பிசிசிஐ நீக்கி இருந்தது.
இதனை சுற்றி பலவிதமான கருத்துகளும் பரவிக் கொண்டே இருக்க, முன்னணி வீரர்கள் இல்லாத போதிலும் இஷானுக்கு வாய்ப்பு இந்திய அணியில் மறுக்கப்பட்டு தான் வருகிறது. அப்படி ஒரு சூழலில் தற்போது இது பற்றி மனம் திறந்து பேசி உள்ளார் இஷான் கிஷான். “இவை அனைத்துமே எனக்கு மன அழுத்தத்தை தான் கொடுத்தது. இன்று நான் நன்றாக இருக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. அது அந்த அளவுக்கு எளிதான விஷயமும் இல்லை.
நான் நன்றாக ஆடி ரன் எடுத்த போதிலும் எனக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இது அணியின் விளையாட்டு என வரும்போது நிச்சயம் நடக்கும். ஆனால் எனக்கு மனரீதியான, உடல் ரீதியான சோர்வு அதிகமாக இருந்தது. இதனால் நான் நன்றாக இல்லை என்பதை உணர்ந்து சிறிய இடைவெளி எடுக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.
ஆனால் இதனை என் குடும்பத்தினரும் எனக்கு நெருக்கமானவர்கள் கூட புரிந்து கொள்ளவில்லை. நான் முதலில் ஒரு பிரேக் எடுத்த போது இது சாதாரணம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் திரும்ப ஆட வேண்டும் என்றால் முதல் தர கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என ஒரு விதி இருக்கிறது. ஆனால் எனக்கு கிரிக்கெட் ஆடுவதே கடினம் என்ற போது தான் எனக்கு என்ன விதி என்பதே புரியவில்லை.
அது அர்த்தமற்றதாக எனக்கு தோன்றியதுடன் என்னால் கிரிக்கெட் ஆட முடியவில்லை என்று தான் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு எடுத்தேன் என்பது உண்மை. அப்படி இருக்கும்போது முதல் தர கிரிக்கெட்டில் என்னால் எப்படி ஆட முடியும்? அதற்கு நான் நேரடியாக இந்திய அணிக்காகவே ஆடிவிடுவேன் என” இஷான் கிஷான் பிசிசிஐ முடிவையும் விமர்சனம் செய்துள்ளார்.