ஆசியக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்காக பெங்களூரில் 5 நாள் பயிற்சி முடித்த இந்திய அணி ஆகஸ்ட் 30 அன்று இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. கேஎல் ராகுலைத் தவிர அணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து வீரர்களும் இலங்கைக்கு சென்றடைந்தனர். 5 நாள் பயிற்சி இந்திய அணிக்கு மிகுந்த தன்னம்பிக்கையை தந்திருக்கும்.
கேஎல் ராகுல் வலைப்பயிற்சியில் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால் விக்கெட் கீப்பிங் செய்வது அவருக்கு சிறித அசௌகரியமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் பெங்களூரிலேயே தங்கி உடல் நிலையை பழைய நிலைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரை மருத்துவ நிபுணர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
எனவே முதல் இரு போட்டிகளில் கேஎல் ராகுல் நிச்சயமாக விளையாட மாட்டார் என்ற உறுதியான தகவல் வெளிவந்துள்ள நிலையில் விக்கெட் கீப்பிங் பணியை யார் செய்வார் என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதற்கான விடைகள் தற்போது கிடைத்துள்ளது
இலங்கையில் செப்டம்பர் 2 அன்று இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் நடைபெற உள்ள போட்டியில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் விளையாடுவார் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் சென்ற இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஆட்டங்களை அங்கு விளையாடியது. அதில் மூன்று ஆட்டங்களில் விளையாடிய இஷான் கிஷன் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். அந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இது குறித்து சமீபத்தில் கிரிக்கெட் செய்தி நிறுவனம் ஓன்று வெளியிட்ட அறிக்கையில்: ஆலூரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா உடன் இஷான் கிஷன் பயிற்சியில் பங்குகொண்டார் . நடுவரிசையில் களமிறங்கும் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா உடன் இஷான் கிஷன் ஒரு மணி நேர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய அணி நிர்வாகம் இஷான் கிஷனை நடு வரிசையில் களம் காண நன்றாக தயார் படுத்தி உள்ளது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இஷான் கிஷன் இந்திய அணியில் மிடில் அடர் பேட்ஸ்மேனாக களம் காணுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.