தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நடப்பு 16-வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தங்களது பிளே ஆப் வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. அதோடு புள்ளி பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக மோத இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 14 சீசன்களில் பங்கேற்றுள்ள சிஎஸ்கே அணியானது தற்போது 12-ஆவது முறையாக பிளே ஆப் சுற்றினை எட்டி சாதனை படைத்துள்ளது. அதோடு சென்னை அணி தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் இறுதி போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது வெற்றி பெற்று பெவிலியனை நோக்கி திரும்பிய போது சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சற்று சீரியஸாக பேசிக்கொண்டு வெளியேறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அப்படி தோனி என்ன தான் ஜடேஜாவிடம் பேசினார் என்பது தெரியவில்லை என்றாலும் ஏதோ முக்கியமான ஒரு விடயத்தை வெற்றிக்கு பிறகு ஜடேஜாவின் தோள் மீது கையை போட்டு கூறியபடி நடந்து சென்றார். அதுமட்டுமின்றி ஜடேஜாவும் தோனியின் அந்த வார்த்தைகளை கேட்டு தனது கருத்துக்களை பதிலுக்கு அளித்தாலும் தோனி இடைவிடாது ஏதோ ஜடேஜாவிடம் கூறிக் கொண்டே இருந்தார். இதனால் சற்று ஜடேஜா அதிருப்தி அடைந்தது அவரை விட்டு நகர்ந்து செல்வதுபோல் அந்த வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த போட்டியில் பேட்டிங்கில் 20 ரன்கள் குவித்த ஜடேஜா, பந்துவீச்சில் 50 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஏற்கனவே கடந்த ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கேப்டன் பதிவியிலிருந்து வெளியேறியது மட்டுமின்றி சென்னை அணியை விட்டு வெளியேற இருந்த வேளையில் இந்த ஆண்டு தோனி அவரை சமாதான படுத்தி சென்னை அணியில் விளையாட வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது தோனி உடனே சற்று வருத்தத்துடன் ஜடேஜா பேசியபடி வெளியேறியது போல இருக்கும் இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனாலும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது முழுமையாக தெரியவில்லை.