இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு மற்றும் ஆதரவு கிடைத்து வருகிறது. ஏனெனில் இந்த ஆண்டு தோனி தனது கடைசி சீசனில் விளையாடுகிறார் என்று அனைவராலும் பேசப்பட்டு வருவதால் தோனியை காண ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் படையெடுத்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் எங்கு போட்டி நடைபெற்றாலும் தோனிக்கு ஆதரவு தெரிவிக்க மஞ்சள் நிற ஜெர்சியில் ரசிகர்கள் மைதானம் முழுவதும் காத்திருக்கின்றனர். அதோடு பேட்டிங் செய்ய தோனி களமிறங்கும் போது அவருக்கு கொடுக்கும் ஆரவாரமும் மிகப்பெரிய அளவில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு போட்டி போடும் நான்கு அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒரு அணியாக இருந்து வருகிறது.
இதுவரை சென்னை அணி பங்கேற்றுள்ள 11 போட்டிகளில் ஆறு வெற்றி, நான்கு தோல்வி மற்றும் ஒரு சமன் என 13 புள்ளிகளுடன் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை அணி நிச்சயம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதி செய்து விடும். இந்நிலையில் தோனிக்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவு பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் அது மனதளவில் ரவீந்திர ஜடேஜாவை காயப்படுத்தி வருவதாக சென்னை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தீபக் சாஹர் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் : தோனி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் ஆட்டமிழக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகிறார்கள். இது என்ன மாதிரி ஆதரவு என்று தெரியவில்லை என ஜடேஜா தங்களிடம் வருத்தப்பட்டதாக தீபக் சாஹர் கூறியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியின் போது கூட சென்னை அணி பேட்டிங் செய்யும்போது ஒரு சில கட்டங்களில் ரசிகர்கள் அமைதியாக இருந்தாலும் ஜடேஜா ஆட்டமிழப்பது போல் தெரிந்தால் மைதானத்தில் ஆர்ப்பரிக்க துவங்கி விடுகின்றனர். இதுகுறித்த சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. ஏனெனில் ஜடேஜா ஆட்டம் இழந்ததால் தான் தோனி களத்திற்கு வருவார் என்பதால் ஜடேஜா ஆட்டமிழக்க வேண்டும் என்று வெளிப்படையாக ரசிகர்கள் வேண்டி வருவது குறிப்பிடத்தக்கது.