சென்னை அணியின் தூண்களில் ஒருவராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார் ஆலரவுண்டர் ரவிந்தர ஜடேஜா. தோனிக்குப் பிறகு அவர்தான் சிஎஸ்கே அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்படுவார் என சொல்லப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவரை கேப்டனாக நியமித்தது அணி நிர்வாகம். ஆனால் அவர் தலைமையில் தொடர் தோல்விகள் வர, பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகிக் கொள்ள, மீண்டும் தோனி கேப்டனானார்.
அந்த சீசனின் கடைசி சில போட்டிகளில் ஜடேஜா அணியில் எடுக்கப்படவில்லை. அதற்கு அவரின் காயம் காரணமாக சொல்லப்பட்டாலும், அணி நிர்வாகத்துக்கும் அவருக்கும் சுமூக உறவு இல்லை என்பது தெரியவந்தது. அதை உறுதிப் படுத்துவது போல சிஎஸ்கே சமூகவலைதளப் பக்கம் ஜடேஜாவை பின் தொடர்வதை நிறுத்தியது.
பதிலுக்கு ஜடேஜாவும் சிஎஸ்கே அணியோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார். இதனால் இந்த சீசனில் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இருதரப்பும் சமாதானமாகி சிஎஸ்கே அணியில் அவர் இணைந்தார்.
இந்த சீசனில் எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் சில போட்டிகளில் ஜடேஜா பேட் செய்யும் போது தோனி களமிறங்க வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே ரசிகர்களே ஜடேஜா அவுட் ஆக வேண்டும் எனக் கத்த ஆரம்பித்தனர். இதனால் ஜடேஜா மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தார். அதை ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தவும் செய்தார்.
இது சம்மந்தமாக ஒருவர் ஜடேஜாவின் மனநிலை இந்த கோஷங்களால் பாதிக்கப்படும் என சொல்ல, அந்த ட்வீட்டையும் லைக் செய்திருந்தார் ஜெட்டு. மேலும் கடைசியாக சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி முடிந்ததும் தோனி ஆவேசமாக ஜடேஜாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது தெரியவில்லை.
இதையும் படிக்கலாமே: பெங்களூரு அணியின் தோல்வியினால் வரலாற்றை மாற்றி அமைக்கும் வாய்ப்பினை பெற்ற மும்பை இந்தியன்ஸ் – கோப்பையை வெல்லுமா?
இந்நிலையில் இப்போது திடீரென ஜடேஜா தன்னுடைய சமீபத்தைய ட்வீட்டில் “கர்மா எப்படியும் உங்களிடம் வரும். அது சிக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ, ஆனால் வந்தே தீரும்” என்று பதிவு செய்துள்ளார். இந்த திடீர் ட்வீட்டால் அவருக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது என ரசிகர்கள் இப்போது கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர். சென்னை அணி ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ள இந்த நிலையில் ஜடேஜாவின் இந்த ட்வீட்டும், ரசிகர்களின் சந்தேகமும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.