டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடந்த டி20 உலக கோப்பைத் தொடருடன் ஓய்வினை அறிவித்திருந்தார். இந்த தொடர் முழுக்க பெரிய அளவில் விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் ரன் சேர்க்க முடியாமலும் திணறி வந்த ஜடேஜா, ரோஹித் மற்றும் கோலி ஆகியோரை தொடர்ந்து டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து மட்டும் தனது ஓய்வினை அறிவித்திருந்தார்.
இதனால், வரும் தொடர்களில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து இடம் பிடிப்பார் என்றும் கருதப்பட்டது. அது மட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்டவற்றிலும் ஒரு ஆல் ரவுண்டராக ஜடேஜாவின் தாக்கம் முக்கியமாக இருக்கும் என கருதப்பட்டது.
ஆனால், இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா தேர்வாகாமல் போயுள்ளார். அடுத்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக 6 ஒரு நாள் போட்டிகளை மட்டுமே இந்திய அணி ஆட உள்ளதால் ஜடேஜா அதிலும் தேர்வாகாமல் போகவே அதிக வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தான் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் தேர்வாகாமல் போனதற்கு காரணம் என புதிய குண்டை ரசிகர்கள் தற்போது தூக்கி போட்டுள்ளனர். இந்திய அணியில் தற்போது ஆல் ரவுண்டர் இடத்திற்காக இலங்கை தொடரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஜடேஜாவை புறந்தள்ளி விட்டு தேர்வாகி உள்ளனர்.
இதற்கு கம்பீரும் ஒரு முக்கிய காரணம் என கருதப்படும் நிலையில் ஜடேஜாவின் பழைய ட்விட்டர் பதிவையும் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். கொல்கத்தா அணியின் கேப்டனாக கம்பீர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆடிய சமயத்தில் எதிரணியில் தோனி பேட்டிங் செய்த போது அவருக்கு டெஸ்ட் போட்டி போல அருகே ஃபீல்டிங் செட் செய்திருந்தார்.
இது மிகப்பெரிய அளவில் அந்த சமயத்தில் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் இது தொடர்பாக கொல்கத்தா அணியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கம்பீரின் ஃபீல்டிங்கை மாஸ்டர் ஸ்ட்ரோக் என கமெண்ட் செய்திருந்தார். ஆனால் இதனை கவனித்த ரவீந்திர ஜடேஜா இது மாஸ்டர் ஸ்ட்ரோக் இல்லை என்றும் இது வெத்து சீன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
தோனிக்காக கவுதம் கம்பீரை அந்த சமயத்தில் கலாய்த்து பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தின் விளைவு தான் தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனதற்கு காரணமாக இருந்து உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.