சென்னை அணியின் மதிப்பு மிக்க வீரர்களில் ஒருவர் ஜடேஜா என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால்தான் கடந்த ஆண்டு அவரை சிஎஸ்கே நிர்வாகம் தோனி இருக்கும் போதே கேப்டன் ஆக்கியது. ஆனால் அவர் தலைமையில் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததால் அவராகவே பதவி விலக, மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார் தோனி.
இந்த ஆண்டு ஒரு வீரராக மட்டும் அணியில் தொடர்ந்து விளையாடி வரும் ஜடேஜா, பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் கலக்கி வருகிறார். ஆனால் அவர் மனதை நோகடிக்கும் விதமாக சில சம்பவங்கள் இந்த சீசனில் நடந்தன. சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இந்த சீசன்தான் கடைசி சீசன் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
அதனால் அவரின் பேட்டிங்கைப் பார்க்க ஆவலாக உள்ளனர். அதனால் தோனிக்கு முன்பு பேட்டிங் செய்ய வரும் ஜடேஜா அவுட் ஆகி தோனி சீக்கிரம் பேட் செய்யவரவேண்டும் என மைதானத்தில் ஜடேஜா விளையாடும் போதே கோஷமிட்டு வருகின்றனர். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஜடேஜா தன்னுடைய ஆற்றாமையை ஒரு ட்வீட்டாக சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று நடந்த முதல் குவாலிபையர் போட்டியில் ஜடேஜா, பேட்டிங்கில் 16 பந்துகளில் 22 ரன்களும், பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களையும் சாய்த்து அணிக்கு பேருதவியாக இருந்தார்.
இதனால் போட்டி முடிந்ததும் அவருக்கு அப்ஸ்டாக் என்ற நிறுவனம் “மதிப்பு வாய்ந்த வீரர்” (Most Valuable player) என்ற விருதை வழங்கியது. அது சம்மந்தமான புகைப்படத்தை பகிர்ந்த ஜடேஜா “அப்ஸ்டாக்குக்கு தெரிகிறது. சில ரசிகர்களுக்கு தெரியவில்லை” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் ஜடேஜாவுக்கு ரசிகர்களின் செயல்கள் (அவுட் ஆக வேண்டும் என கத்தியது) எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்பது தெரிய வருகிறது.
இதையும் படிக்கலாமே: தோனியோட மூலையும், பௌலர்கள வச்சி அவர் கொடுக்கற ட்விஸ்ட்டும் நம்பள வேற மாதிரி யோசிக்க வச்சிடுது – ஹர்திக் பாண்டியா பேட்டி
இதைப் பார்த்தாவது ரசிகர்கள் தங்கள் தவறை உணர்ந்து ஜடேஜாவுக்கு இனிமேலாவது ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஜடேஜாவின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே சமயம் ரசிகர்கள் பலர் உங்களுடைய அருமை எங்களுக்கு புரிகிறது என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். அதே போல மற்ற அணி ரசிங்கர்கள் பலர், ஜெட்டு உங்கள் தகுதிக்கு வேறு அணி தான் சிறந்தது. நீங்கள் எங்கள் அணிக்கு வாருங்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.