நேற்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவில்லாமல் கைவிடப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
இந்த போட்டி மழை காரணமாக டாஸ் மற்றும் ஆட்டம் தொடங்குவது சற்று தாமதமானாலும், போட்டி தொடங்கியவுடன் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. முதல் இன்னிங்ஸின் பெரும்பகுதி மழை குறுக்கீடு இல்லாமல் முடிக்கப்பட்டதன் மூலம் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 125 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியுன் பதோனி அதிக பட்சமாக 33 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் சி எஸ் கே அணிக்கு வெற்றி எளிது என்ற சூழல் இருந்த போதுதான் மழை மீண்டும் குறுக்கிட்டது. அதன் பின்னர் மழை நிற்கவே இல்லை என்பதால் போட்டி முடிவில்லாமல் கைவிடப்பட்டது.
இந்த போட்டியில் சென்னை அணி பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி, லக்னோ பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். அதிலும் தீக்ஷனா மற்றும் ஜடேஜா போன்ற சுழல்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் அருமையாக ஒத்துழைத்தது.
நேற்றைய போட்டியில் ஜடேஜா அருமையான ஒரு ஆஃப் கட்டர் மூலமாக ஸ்டாய்னஸ் விக்கெட்டைக் கைப்பற்றினார். லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்து பேட்டுக்கு வரும் என எதிர்பார்த்து தடுத்தாட முயன்ற ஸ்டாய்னஸ்ஸை ஏமாற்றிய பந்து ஆஃப் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. விக்கெட் விழுந்து கொஞ்ச நேரம் ஆகியும் இதை நம்ப முடியாமல் அதிர்ச்சியோடு முழித்துக் கொண்டிருந்தார் ஸ்டாய்னஸ்.
இந்த விக்கெட்டை ரீப்ளையில் பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து ஜடேஜாவை கொண்டாடினர். இந்த வீடியோவும் இப்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. பலரும் இந்த சீசனில் வீசப்பட்ட சிறந்த சுழல்பந்து இதுதான் என கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர்.