சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஜூலை மாதம் 12 ஆம் தேதி மிக முக்கியமான ஒரு நாளாக இனிமேல் பார்க்கப்படும் என்பது தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் மனமுருக வைத்துள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், சுமார் 22 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை முடித்து தனது ஓய்வினையும் அறிவித்திருந்தார்.
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஜோ ரூட் என உலகின் பல முக்கியமான கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் பலரையும் தனது பந்து வீச்சின் மூலம் அவர் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் தனது ஓய்வினையும் அறிவித்திருந்தார்.
முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் வீழ்த்தியுள்ள நிலையில் அவருக்கு அடுத்தபடியாக ஷேன் வார்னேயும் அதனைத் தொடர்ந்து தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 704 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் மொத்தம் 704 விக்கெட் எடுத்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், மிகவும் எமோஷனலாக தனது அணி வீரர்கள் மத்தியில் இருந்து விடை பெற்றுக் கொண்டார்.
40 வயதுக்கு மேலான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது பந்துவீச்சால் இளம் வீரர்களை கூட அச்சுறுத்தி வந்ததுடன் மட்டுமில்லாமல் தான் கடைசியாக ஆடிய போட்டியிலும் மொத்தம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இங்கிலாந்து மட்டுமல்லாமல் பல நாடுகளில் ஆண்டர்சனின் வேகப்பந்து வீச்சுக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளமாக உள்ளது. வேகப்பந்து வீச்சில் மிக அசாதாரணமாக ஆண்டர்சன் எடுக்கும் போல்டுகள் தான் ரசிகர்களின் ஃபேவரைட்.
அப்படிப்பட்ட ஒரு வீரர் சுமார் 22 ஆண்டுகளாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்து பல சாதனைகளையும் செய்திருந்த நிலையில் அவர் ஓய்வு பெற்றிருந்தது ரசிகர்களை கண்ணீர் விடவும் வைத்திருந்தது. இதனிடையே தற்போது அவர் ஓய்வினை அறிவித்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் செய்த ஒரு சில முக்கியமான சாதனைகளை தற்போது பார்க்கலாம். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 40 ஆயிரம் பந்துகளை வீசி உள்ள ஆண்டர்சன், இந்த இடத்தை தொட்ட முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்களாக முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் 40,000 பந்துகளுக்கு மேல் வீசியுள்ள நிலையில் வேகப்பந்து வீச்சில் அந்த வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார் ஆண்டர்சன். அது மட்டுமில்லாமல் இன்னொரு பக்கம் ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து 50,000 பந்துகளை வீசிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை தற்போது தொட்டுள்ளார் ஆண்டர்சன்.
இதனிடையே இந்த இரண்டு சாதனைகளிலும் ஆண்டர்சனுக்கு பின்னிருக்கும் பலவீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் இனிமேல் இளம் வீரர்களால் இதைத் தொட முடியுமா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி தான்.