மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை ஆறு பேர் கொண்ட கும்பல் அவரது இல்லம் அருகில் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த படுகொலைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகச் சளைக்காமல் களப்பணி செய்தவர் ஆம்ஸ்ட்ராங். அறிவாற்றல் மிக்க சிறந்த ஆளுமை. எனது பாசமிக்க நண்பராக விளங்கியவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது உறவினர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படுகொலைக்குக் காரணமானவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை அளிக்க வேண்டும் எனக் கோருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.