இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது இன்று கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 50 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 6 விக்கெட்களையும், ஹார்டிக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 51 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 6.1 ஓவரில் 51 ரன்கள் குவித்து பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.
பின்னர் போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது பங்கேற்ற முகமது சிராஜ் தனக்கு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது மூலமாக கிடைத்த 5000 டாலரை (இந்திய மதிப்பில் 4,15,451 ரூபாய்)மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :
மைதான ஊழியர்கள் இல்லை என்றால் நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடரானது நடைபெற்றிருக்காது. அவர்களது உழைப்புக்காக இந்த பரிசுத்தொகையை நான் அவர்களுக்கு வழங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார். அவரது இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட மைதான ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோன்று இந்த ஆசியக் கோப்பை தொடருக்காக கொழும்பு மற்றும் பல்லக்கல்லே மைதானங்களை பராமரித்த மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான ஜெய் ஷாவும் பரிசுத்தொகையினை அறிவித்திருந்தார். அவரது அந்த பரிசுத்தொகை அனைவரையுமே மிரள வைக்கும் அளவிற்கு இருந்தது. ஏனெனில் ஐம்பதாயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் (42 லட்சம் ரூபாயை) அவர் மைதான ஊழியர்களுக்கு காசோலையாக மைதானத்திலேயே வழங்கி கௌரவப்படுத்தியிருந்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத மைதான ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த ஆசிய கோப்பை தொடரின் அன்சங் ஹீரோக்களான மைதான ஊழியர்களுக்கு இந்த தொகையை அளிப்பதில் மகிழ்ச்சி என்றும் கருத்தினை பதிவிட்டுள்ளார். இப்படி சிராஜ் மற்றும் ஜெய்ஷா ஆகிய இருவரும் மைதான ஊழியர்களுக்கு பரிசு தொகையை வழங்கியுள்ளது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.