இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆஸி அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நான்காம் நாள் ஆட்டமுடிவில் அதிகமாக உள்ளன.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 398 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதமடித்துக் கலக்கினார். அவர் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழக்காமல் 118 ரன்கள் சேர்த்தார். ஜோ ரூட் களத்தில் இருக்கும் போதே 393 ரன்களில் அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் அறிவித்தது ஆச்சர்யமாக அமைந்தது.
அதன் பின்னர் முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி அணியில் உஸ்மான் கவாஜா சதமடித்தார். 7 ரன்கள் முன்னிலையோடு இறங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாட போய் விக்கெட்களை இழந்தது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வெற்றி இலக்கு 282ஐ நோக்கி இப்போது ஆஸி அணி பேட் செய்து வருகிறது.
இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட், 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஆனால் அவர் அவுட் ஆன விதத்திலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டியில் ஜோ ரூட் நாதன் லயன் பந்தில் ஸ்டம்ப் இட் முறையில் ஆட்டமிழந்தார். இதுதான் டெஸ்ட் போட்டிகளில் ரூட் முதல் முதலாக ஸ்டம்ப் இட் ஆவது.
டெஸ்ட் போட்டிகளிலேயே அதிக ரன்கள் சேர்த்த பின்னர் ஸ்டம்ப் இட் ஆன வீரர் என்ற பல ஜாம்பவான்களின் சாதனைகளை ரூட் முறியடித்துள்ளார். ஸ்டம்ப் இட் ஆவதற்கு முன்பாக ஜோ ரூட் 11,168 ரன்களை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் விராட் கோலி 8,195 ரன்கள் சேர்த்த பின்னர் ஸ்டம்ப் இட் முறையில் ஆட்டமிழந்தார்.
இதே போல முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித் 8,800 ரன்கள் சேர்த்த பின்னர்தான் முதல் முறையாக ஸ்டம்ப் இட் ஆனார். ஆனால் எல்லோரையும் விட இதில் முதலிடத்தில் இருப்பது வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஷிவ்நாராயண் சந்தர்பால்தான். அவர் 11,414 ரன்கள் சேர்த்த பின்னரே டெஸ்ட் போட்டிகளில் ஸ்டம்ப் இட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.