இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடர் மிக முக்கியமான கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. மூன்று போட்டியின் முடிவில், இந்திய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றியை கண்டுள்ளது. தற்போது ஆரம்பமாகி நடந்து வரும் நான்காவது போட்டியுடன் சேர்த்து இரண்டு போட்டிகள் மீதம் இருப்பதால் இங்கிலாந்து அணிக்கும் இந்த தொடரை வெல்ல வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது.
அப்படி ஒரு ஆட்டத்தையும் கூடத்தான் அவர்கள் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகின்றனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய அதன்படி ஆடிய இங்கிலாந்து அணி, அறிமுக வீரர் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும் இதுவரை இந்த தொடரில் சோபிக்காமல் இருந்த இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், மிக நிதானமாக ஆடி சதம் கடந்து இங்கிலாந்து அணியையும் மெல்ல மீட்டெடுத்திருந்தார்.
பேஸ்பால் என்ற ஆட்டத்திற்குள் சிக்கி இத்தனை நாட்கள் ரன் அடிக்க முடியாமல் தடுமாறிய ஜோ ரூட், தற்போது வழக்கம் போல தனது நிதானமான ஆட்டத்தை ஆடி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி உள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கும் புத்துணர்வை கொடுத்துள்ளது. அவரது சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணியும் 353 ரன்கள் எடுத்தது.
ஆனால் இதன் பின்னர் தொடர்ந்து அடிய இந்திய அணி, 219 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தவித்து வருவதுடன் மட்டுமில்லாமல் இங்கிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலை வகிப்பதும் இந்திய அணிக்கு பெரிய சிக்கலாகவே மாறி உள்ளது. இந்த டெஸ்டில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் நினைத்த நிலையில் இதுவரை முடிந்துள்ள இந்த டெஸ்டின் போக்கு அவர்களுக்கு சாதகமாகவும் அமையவில்லை.
இதே ஃபார்மை இங்கிலாந்து அணி தொடரும் பட்சத்தில் இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியும் உள்ளதால் தொடர் தோல்விகளுக்கு பென் ஸ்டோக்ஸ் அண்ட் கோ மீண்டு வருவார்கள் என்றே தெரிகிறது. இதனை தவிர்த்து இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால், இரண்டாவது இன்னிங்சில் பெரிய கம்பேக் ஒன்றும் அவர்களுக்கு தேவைப்படுகிறது.
இந்த நிலையில் தனது சதம் பற்றி பேசி இருந்த ஜோ ரூட், “இரண்டு நாட்கள் எங்களுக்கு மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது. இது போன்று தான் நாங்கள் எப்போதும் சூழல் மற்றும் போட்டியின் நிலை அறிந்து ஆடுகிறோம். இங்கிலாந்து அணிக்காக தற்போத ரன்கள் சேர்த்தது மகிழ்ச்சியாகவும் உள்ளது. 96 ரன்களில் நான் இருந்தபோது ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து சதமடிக்கலாம் என நினைத்தேன். ஆனால் விக்கெட்டுகள் இல்லாத பட்சத்தில் அது சிறந்த முடிவாக இருக்காது என எனது மனதை நானே மாற்றிக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.