இந்திய அணி விறுவிறுப்பாக ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. ஆனால் இந்த தொடர்களில் இந்திய அணிக்கு அச்சுறுத்தும் வகையில் இந்திய வீரர்களின் பிட்னெஸ் அமைந்துள்ளது. இந்திய அணியில் பூம்ரா, ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக தற்போது அணியில் இடம்பெறவில்லை. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
முன்னணி வீரர்கள் இந்த காயப் பிரச்சினைகளுக்கு மத்தியில், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் மற்றொரு வீரரின் பிட்னெஸ் குறித்து அச்சம் தெரிவித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல ஹர்திக் பாண்ட்யாதான். கடந்த சில ஆண்டுகளாக முதுகு பகுதியில் காயம் காரணமாக அவர் அவதிப்பட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் காயத்தில் இருந்து மீண்டு வந்து ஒரு அற்புதமான ரி எண்ட்ரி கொடுத்தார். அதன் மூலம் இந்தியாவின் வெள்ளை-பந்து அணிகளில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக டி20 போட்டிகளில் அவர் இந்தியாவை வழிநடத்தி வருகிறார்.
ஹர்திக் பாண்ட்யா குறித்து பேசிய கபில்தேவ் “ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் காயங்கள் ஒரு பகுதியாகும். நிலைமை சீராகும் என நம்புகிறேன். ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து நான் எப்போதும் பயப்படுவேன், அவர் மிக விரைவாக காயமடைவார். இந்திய வீரர்கள் அனைவரும் உடற்தகுதியுடன் நன்றாக இருந்தால், இந்தியா ஒரு முழுமையான அணியாக மாற முடியும்” என்று கபில் தேவ் ABP நியூஸிடம் பேசும்போது கூறியுள்ளார்.
மேலும் “நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உலகக் கோப்பை வருகிறது, எனவே நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நமக்கு பயிற்சி போட்டிகள் தேவை, நமக்கு அதிக ஒருநாள் போட்டிகள் தேவை,” என்று கபில் மேலும் கூறியுள்ளார். அதிக அளவில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவது சிறிது காலத்துக்கு நிறுத்தப்பட வேண்டும்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கரீபியனில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஹர்திக் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் இந்தியாவை வழிநடத்தினார், அப்போது ரோஹித் ஷர்மா குடும்ப சூழல் காரணமாக அந்த தொடரில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.